கரிகாலர் மூவர்
கரிகாலர் மூவர், வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html
கரிகாலன் என்பவன் ஒருவன்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மூன்று கரிகாலன்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் இந்நூலாசிரியர். அதுமட்டுமல்ல, முதலாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 450 எனவும், மூன்றாம் கரிகாலனின் காலம் கி.மு. 305 எனவும் அறுதியிட்டுக் கூறுகிறார். மூவரும் வெவ்வேறு நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததையும் உறுதிப்படுத்துகிறார். அதற்கான ஆதாரமாகப் பொருநராற்றுப்படை, பத்துப்பாட்டு, பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் வரிகளைக் குறிப்பிடுகிறார். கரிகாலனுடைய பகைவர்கள் அவனைச் சிறையில் அடைத்து, சிறைக்குத் தீ இட்டனர். இந்தச் சிறையிலிருந்து மீண்டும் வெளியே வரும்போது கால்களில் நெருப்புப் பட்டுக் கரிந்துபோனதால், கரிகாலன் என அழைக்கப்படுகிறான் என்பதற்குப் பொருநராற்றுப்படை பாடல் வரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மூவருடைய ஆட்சிக் காலத்திலும் இருந்த சமுதாய நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் கரிகாலன் காலத்திலேயே கார்த்திகை மாதம் விளக்குகளை ஏற்றி கார்த்திகை விழா கொண்டாடப்பட்டதும், அந்த விழாவை மக்கள் எவ்வாறு கொண்டாடினர் என்பதும் நம் கண் முன் நிறுத்தப்படுகிறது. இந்த நூலின் மூலம் மூன்று கரிகாலன்களின் வாழ்க்கை, ஆட்சி முறை, சமுதாய நிலை விளக்கப்பட்டுள்ளது. கரிகாலன் குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் நூல். நன்றி: தினமணி, 29/7/2013.
—-
தவறின்றித் தமிழ் எழுதுவோம், அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49.
தமிழர்கள் அனைவரும் தமிழ்ப்பற்று மிக்கவர்கள். தமிழை கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு கருவி என்று எண்ணாமல், தாய் என்று போற்றுகிறவர்கள். ஆயினும் தமிழைப் பிழை இன்றி எழுதுவோர் எண்ணிக்கை, நாம் மகிழ்ச்சி அடையும் வகையில் இல்லை. தமிழைப் பிழையின்றி எழுத விரும்புகிறவர்களும்கூட அதற்கு வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். அத்தகையோருக்கு உதவும் வகையில் தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலை, தமிழ்ப்பிரியன் எழுதியுள்ளார். சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைக் கொடுத்து இதில் எது சரி, எது தவறு என்று விளக்குகிறார். சிறுவர்கள்கூட புரிந்துகொள்ளலாம். இதன் விலை ரூ. 45. தமிழ் இலக்கணத்தை விவரித்துச் சொல்லும் நூல் ஒன்றையும் தமிழ்ப் பிரியன் எழுதியுள்ளார். விலை 80ரூ. நன்றி: தினத்தந்தி, 20/11/2013