வானொலி வளர்த்த தமிழ்

வானொலி வளர்த்த தமிழ், முனைவர் இளசை சுந்தரம், மீனாட்சி புத்தகம் நிலையம், பக். 150, விலை 260ரூ.

காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது. தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, வானொலி வளர்த்த இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் என, தனித்தனி அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வருகைக்கு பின், வானொலி வாழுமா என்ற கேள்விக்கு இளசையின் பதில் சிந்திக்க தூண்டுவது. இந்த புத்தகம் ஒரு வானொலி ஆவணம். -ஜிவிஆர்.  

—-

 

பிரெஞ்ச் இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர், சியாமளா சவுந்தரசாமி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 152, விலை ரூ.100.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், காரைக்காலில் உள்ள இளையான்குடியில் பிறந்த அரங்கசாமி நாயக்கர், புதுச்சேரி விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரது வரலாற்றை அவரது மூத்த மருமகள் படைத்துள்ளார். அரங்கசாமி நாயக்கரின் தாத்தா காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நவாப்புக்கு அஞ்சி அங்கிருந்து நடந்தே காரைக்காலுக்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார். காந்தியடிகள் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கதர் அணியத் தொடங்கிய அரங்கசாமி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தைப் புதுவையைவிட்டு விரட்டப் பாடுபட்டுள்ளார். அரிசன மக்கள் பொதுக் குளத்தில் நீராடுவதற்கும் பொது இடங்களில் நடமாடுவதற்கும், ஆலயத்திற்குள் நுழைவதற்கும் அந்தக் காலத்திலேயே பாடுபட்டுள்ளார். புதுவை வரலாற்றுடன் பிரிக்க முடியாத அரங்கசாமி நாயக்கரின் வரலாற்றை, எளிய தமிழில் அரிய ஆவணங்களுடன் வழங்கியுள்ளார் நூலாசிரியர். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 24/11/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *