இவர்கள் நோக்கில் கம்பன்
இவர்கள் நோக்கில் கம்பன், சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 352, விலை 200ரூ.
மதுரை கம்பன் கழகம், 2012ல் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவுகளின் சாரம் இந்நூல். கம்பனும் திருமூலரும் (சொ.சொ.மீ. சுந்தரம்), கம்பனில் காலமும் கணக்கும் (தெ. ஞானசுந்தரம்), கம்பனும் வில்லியும் (ம.பெ. சீனிவாசன்), கம்ப ராமாயணமும் நாலடியாரும் (இளசை சுந்தரம்), கம்பனில் அங்கதன் (கு. ராமமூர்த்தி), கம்பனும் பைபிளும் (எஸ். ராஜா), கம்பனும் உரையாசிரியர்களும் (மு. அருணகிரி), கம்பரும் கிறிஸ்தவக் கம்பரும் (எம். கண்ணன்), கம்பனில் பாராட்டு (சி.எஸ். விசாலாட்சி), கம்பனில் கவிக்கூற்று (எல். சீத்தாராமன்), கம்பன் காலத்துச் சமநிலை (சாலமன் பாப்பையா), இப்படி 11 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் திருமூலர் தொகுத்த நாலடியார், பைபிள், கிருஷ்ணப்பிள்ளை போன்றவர்களின் படைபுகளுடன் ஒப்புட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. காலந்தோறும் கம்பனின் படைப்பு, பல ஆய்வுகளுக்கு அடித்தளமாக, புதிய பரிமாணங்களைப் பெற்று இலக்கியச் சுவை தந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இந்நூலைப் படித்து இன்புறலாம். -பின்னலூரான்.
—-
விநாயகர் பெருமை, ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 176, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-3.html இந்துக்களின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் என்று பலரும் கூறுவர். பிள்ளையாரின் பெருமை அளவிடற்கரியது. இந்நூலில் விநாயகரின் பெருமையை 21 தலைப்புகளில் மிக அருமையாக தந்துள்ளார் நூலாசிரியர். காலங்கடந்த கணபதி என்ற தலைப்பில் ஆசிரியர் விளக்கும்போது புலிகேசி மன்னனைத் தோற்கடித்து, நரசிம்ம வர்ம பல்லவனுடைய தளபதி பரஞ்சோதி வாதாபியில் இருந்துகொண்டு வந்த சிலைதான் பிள்ளையார் என்று வாதிடுவோருக்கு தக்க பதிலைத் தந்திருப்பது நல்ல வாதம் (பக்கம் 8). பிள்ளையார் திருவுருவ தத்துவத்தையும், நோன்புகளையும் விரதங்களையும் விளக்குவதுடன், அயல்நாடுகளில் ஆனைமுகத்தோன் அருகம்புல்லின் மகிமை அஷ்டகணபதி கோவில்கள் முதலிய குறித்து விளக்குவது நூலாசிரியரின் மதிநுட்பத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். விநாயக சதுர்த்தி எளிய பூஜாமுறை என்ற பகுதியும் பிள்ளையார் தோத்திரங்கள் என்ற பகுதியும் பலருக்கு பயன்தரும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 8/9/13