வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-6.html
சத்தமே இல்லாமல் சாதனை படைக்கச் சிலரால்தான் முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செ.திவான். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தோண்டி எடுத்துவந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றிய ஒரு சிலரில் திவான் குறிப்பிடத்தக்கவர். முஸ்லிம் மன்னர்கள் என்றாலே… கொள்ளையடிக்க வந்தவர்கள், இந்துக்களுக்கு வரி விதித்தவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்-என்பதே வரலாறாக திணிக்கப்பட்ட சூழ்நிலையில், அவர்களின் இன்னொரு பாகத்தைக் காட்டியவர் திவான். அதேபோல் வ.உ.சிதம்பரனாரை சுதந்திரப் போராட்ட வீரவராக மட்டும் பார்த்தவர்கள் மத்தியில், அவரது இலக்கிய ஆளுமையை சிறு வெளியீடுகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தவரும் திவான். இன்றைய பல்கலைக்கழக முனைவர் பட்டங்களோடு ஒப்பிட்டால், திவானுக்கு எத்தனையோ பட்டங்கள் தந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வரலாற்று அறிஞராக வலம்வரும் செ.திவான்., ஔரங்கஜேப் பற்றி எழுதிய கனமான புத்தகம் இது. வரலாற்றில் ஔரங்கஜேப் கசப்பான முறையில் விமர்சிக்கப்படுகிறார். இந்துக்களின் பகைவர் என்று மதவாத முத்திரை அவர் மீது அழுந்தப் பதிந்துள்ளது. த னது தந்தை ஷாஜஹானை அரண்மனைக் காவலில் வைத்தவர் என்பதால், பந்தபாசம் இல்லாதவர் என்றும் கொச்சைப்படுத்தப்படுகிறார். ராஜபுத்திரர்களையும் சீக்கியர்களையும் இவர் வெறுத்தார் என்றும், இசைக் கலைஞர்களைப் பிடிக்கவே பிடிக்காது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் திரட்டிச் சேர்த்திருக்கிறார் திவான். தந்தை ஷாஜஹானை ஔரங்கஜேப் சிறைவைத்தார் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், மூத்த மகன் தாராவுக்கு ஷாஜஹான் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்த வேதனைதான் ஔரங்கஜேப்புக்கு அதிகமாகி, வளர்ந்துள்ளது என்ற மனரீதியான வரலாற்றுச் சம்பவங்களைத் திரட்டிக் கொடுத்துள்ளார் திவான். மொகலாய மன்னர் அக்பர், அஜ்மீருக்குச் சென்று திரும்பும்போது, சாம்பர் என்ற ஊரில் ஆம்பர் மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அக்பரின் மொகலாய வழியும் ராசபுத்திர வழியும் இந்தத் திருமணத்தில் ஒன்று சேர்ந்தது. இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்தான் ஜஹாங்கீர். அவர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளைத் திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் ஷாஜஹான். எனவேதான், ஷாஜஹானிடம் மொகலாய ரத்தத்தைவிட, இந்திய ரத்தமே அதிகம் ஓடியது என்பார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். அதனை அடிப்படையாக வைத்து ஔரங்கஜேப் வரலாற்றைப் படிக்கும்போது வரலாறு வெளிச்சம் அடைகிறது. -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 4/12/13.
