செம்புலச் சுவடுகள்

செம்புலச் சுவடுகள், (ஓர் உரைக்கவிதை தொகுப்பு), கி. தனவேல், இ.ஆ.ப. கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ.

கிராமத்து நிலப்பரப்பு தென்னார்க்காடு மாவட்ட கிராமங்களின் ஞாபகச் சுவடுகளை ஏக்கத்துடன் நினைவுகூரும் கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது. கி. தனவே இ.ஆ.ப. எழுதியிருக்கும் செம்புலச் சுவடுகள் கவிதைத் தொகுப்பு. நவீன கால நகர்ப்புற வாழ்க்கையில் தான் இழந்துவிட்ட கிராமத்து அடையாளங்களை ஒவ்வொரு நாளும் நகருக்குள் வாழப் பணிக்கப்பட்ட கிராமத்துவாசி நினைவு கூர்கின்றான். நினைவில் கிராமம் சுமந்து அலையும் அவனது பெருமூச்சுக்கள் இங்கே கிராமத்து மொழியில் கவிதைகளாக உள்ளன. ஆயாக்களிடம் விடப்பட்ட அடுத்த தலைமுறை அறியுமா அம்மாயிகளின் வாசம்? என்று தன் அம்மாயியை நினைவுகூரும் கவிதையில் கேட்கும் இவர் தன் ஆசிரியர்களை, பள்ளித் தோழர்களை, நெய்வேலி சுரங்கத்தால் இடம்பெயர்ந்த கிராமத்தை, வீட்டுக்கு முதல் முதலாக வந்த ரேடியோவை, சாமியாட்டத்தை என நினைவுகூர்ந்து கொண்டே போகிறார். ஊருக்குள் வரும் தாசில்தாரின் ஜீப் ஹாரனை அனுமதி வாங்கி அழுத்திப் பார்த்ததை சொல்லும் கவிதை ஒற்றைப் படிக்கையில் இவரது இ.ஆ.ப. கனவு எங்கே முளைவுட்டிருக்கும் என்பது சட்டென்று பிடிபடுகிறது. கார்த்திகைத் தீபத்துக்கு பொறிப்பொறியாய் தீ கொட்டும் காத்திப் பொட்டலம் சுற்றுவது பற்றிய நீண்ட கவிதை ஒன்று குறிப்பிடத்தகுந்தது. கிட்டத்தட்ட எல்லா கவிதைகளிலும் சின்னதாய் ஒரு பால்ய சம்பவத்தின் நினைவு ஏக்கத்துடன் உருவெடுக்கும் கவிதைகளாய் இவை அமைந்துள்ளன.  

—-

 

கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும், இவள் பாரதி, புதிய தலைமுறை, 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத் தாங்கல், சென்னை 32, விலை 110ரூ.

ஏமாற்றத்துக்கு தீர்வு செல்போன் சரியில்லை என்று வழக்குத் தொடர்ந்து அம்பானியையே கைது செய்ய உத்தரவு வாங்கியிருக்கிறார் சாமானியர் ஒருவர். பேருந்துப் பயணத்தின்போது 12 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட, பத்தாயிரம் அபராதம் கட்ட வைத்தது நீதிமன்றம். வீட்டுக்கு வாங்கிப் போன டி.வி. சரியில்லை என்றதும் மன உளைச்சலுடன் டிவி ஷோரூமுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஒருவர். ஷோரூம்காரர்கள் உடனே ஓடிவந்து புதிய டிவியைக் கொடுத்துச் சென்றனர். பொய்யான விளம்பரம் பார்த்து ஒரு பொருளை வாங்கினார் ஒருவர். தான் ஏமாந்ததை அறிந்ததும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வழக்கப்பட்டது. இப்படி பல வெற்றிகரமான நுகர்வோர் வழக்குகளைப் பற்றிய விவரங்களைச் சுவாரசியமாகத் தொகுத்துள்ளார் இவள் பாரதி. புதிய தலைமுறை இதழில் தொடராக வெளியிடப்பட்ட இக்கட்டுரைகள் இக்காலகட்டத்தில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுடன் ஏமாற்றப்படுவோர் சரியான முறையில் வழக்குத் தொடர்ந்தால் அதற்குத் தீர்வும் உண்டு என்பதை உணர்துகின்றன. எந்தெந்த குறைபாடுகளுக்கு வழக்குத் தொடரலாம்? எப்படி வழக்குத் தொடர்வது என்பதற்கான ஆலோசனைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: அந்திமழை, 1/11/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *