ஏற்றம் தரும் மாற்றம்
ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், புதிய தலைமுறை பதிப்பகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, பக். 160, விலை 170ரூ.
மூலப் பொருட்களை அப்படியே வணிகம் செய்யாமல் யாரெல்லாம் மதிப்புக் கூட்டி வணிகம் செய்கிறார்களோ அவர்கள் எல்லாம் பொருளாதார ரீதியில் சிறப்பாக உயர்ந்து வருகிறார்கள். அதற்கு உதாரணம் ஜப்பான். ஆனால் அனைத்து மூலப்பொருட்களும் நிறைந்து விளங்கும் நமது நாட்டில் மதிப்புக் கூட்டி வணிகம் செய்வதின் மகத்துவத்தை உணராதவர்களாக நாம் இருந்து வருகிறோம். அந்தக் குறையைப் போக்க மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன என்பதை எளிமையாக விளக்கிப் புதிய புதிய மதிப்புக் கூட்டுதல் யுக்தி மூலம் தொழிலில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களையும் சேர்த்துத் தந்திருப்பது பொருளாதார ரீதியில் படிப்பவர்களை உயர்த்த உதவும். நன்றி: குமுதம், 29/1/2014.
—-
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள், ஜீ. முருகன், ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 128, விலை 80ரூ.
புகழ்பெற்ற ரஷ்ய திரைக்கலைஞரான ஆந்த்ரேய்தார்க்கோவஸ்கியின் ஏழு திரைப்படங்களைப் பற்றிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வாரு திரைப்படத்தின் கதையின் மையப்புள்ளி, கதாபாத்திரங்களின் மன உணர்வுகள், அப்படங்களை உருவாக்கும்போது தார்க்கோவஸ்கியின் எண்ணவோட்டம் போன்றவற்றை விரிவாகப் பேசுகின்றன இக்கட்டுரைகள். குறிப்பாக தேவலாயங்களில் கடவுள் உருவங்களை வரையும் ஆந்த்ரே ரூப்ளேவ் என்ற ஓவியனின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆந்த்ரே ரூப்ளேவ் என்கிற திரைப்படம் பற்றிய கட்டுரையும், தனது தாய்நாடான ரஷ்யாவைவிட்டு, இத்தாலியில் வாழ நேர்ந்தபோது தனது நாடு, ஊர், குடும்பம் இவற்றை எண்ணி ஏக்கம் கொள்ளும் சோஸ்னோவஸ்கி என்னும் இசைக்கலைஞனைப் பற்றிய நோஸ்டால்ஜியா என்கிற திரைப்படம் பற்றிய கட்டுரையும் சிறப்பானவை. ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் நுட்பமானவையாயினும் எளிமையானவையல்ல. மீண்டும் மீண்டும் பார்த்தால்தான் விளங்கிக் கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரைகள் நிச்சயம் உதவும். அடுத்த பதிப்பில் பொருளடக்கத்தையும் சேர்ப்பது மிகவும் அவசியம். நன்றி: தினமணி, 22/10/2012.