அனுபவச் சுருள்
அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ.
ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் காப்பாற்றிக் கொள்ள அண்ட முடியாதவன் என்ற கவசத்தை அணிந்துகொண்டேன் (பக். 74) என்று சி. சுப்ரமணியம் கூறுவதும், ஐ ஆம் நாட் வெல் என்ற ஆங்கில வார்த்தை, நான் சரியாயில்லை என்று தமிழில் விபரீத அர்த்தத்தைக் கொடுக்கும் (உடம்பு சரியில்லை) என மொழிபெயர்ப்பு பற்றி ஜெயகாந்தன் கூறியதும் (பக். 87), உண்மையான ஆசார்யனின் மூன்று தகுதிகளாக விசா ரா, ஆச்சாரம், பிரசாரம் பற்றி பேராசான் அண்ணா(பக். 131) விளக்கியதும் ஆக இப்படி எத்தனையோ ருசிகர விஷயங்களை மிக எளிமையாகப் படைத்துள்ள இந்நூலாசிரியரைப் பற்றிய அறிமுகம் எதுவும் நூலில் இல்லாதது பெருங்குறையே. அடுத்த பதிப்பிலாவது நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றால் சிறப்பு. -பின்னலூரான். நன்றி: தினமலர், 9/3/2014.
—-
சிவபெருமானுக்குரிய அஷ்ட மகா விரதங்கள், சு. முருகானந்தம், ரவி ராமநாதன், பிரேமா பிரசுரம், சென்னை, பக். 496, விலை 150ரூ.
அஷ்ட மகா விரதங்கள், சிவ சக்தித் திருத்தலங்கள், முக்கியக் குறிப்புகள், விளக்கங்கள், பாராயணப் பதிகங்கள் என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டது இந்த நூல். சோமவார விரதம், மகா சிவராத்திரி விரதம், உத்திர கல்யான விரதம், கேதார கவுரி, அஷ்டமி ரிஷப விரதம் போன்ற விரதங்கள் குறித்து விவரமாக எழுதுகிறார் நூலாசிரியர். பக்தி இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 9/3/2014.