மதுரை அரசி
மதுரை அரசி, இளங்கோ, இகம் இல்லம், பக். 158, விலை 57ரூ.
அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட மதுரை அரசி என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல். கி.பி. 1812ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ரோஸ் பீட்டர் வாழ்வில் நடந்த வரலாற்று உண்மையை மையப்படுத்தி தடாதகை என்ற மதுரை மீனாட்சியின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு புராணச் செய்திகள் உடன் மாலிக்காப்பூர் படையெடுப்பு, குமாரகம்பணனின் மதுரை வருகை, மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் அரங்கேற்றம் போன்ற பல்வேறு வரலாற்றுச் செய்திகள் சிதைவின்றி இந்நாடகத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. சிறப்பாக, மாலிக்காப்பூர் படையெடுப்புக்கு பின், அந்த நாசங்களை, அடக்க விஜயநகர மன்னர் குமாரகம்பணர் புறப்பட்டு, மதுரைக் கோவிலை மீட்ட செய்தியை வரலாற்றுக் காவியமான மதுரா விஜயம் வழியில் அப்படியே கூறப்பட்டிருப்பது நேர்த்தியாகும். மூன்று என்ற எண்ணின் சிறப்பு, யானையின் மறு பெயர்கள், விரத முறைகள், விழாக்கள், இலக்கிய நினைவூட்டல் போன்ற சமூகத்தோடு தொடர்புடைய பல கருத்துகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மொத்தத்தில் வரலாறு, ஆன்மிகம், இலக்கிய ஆளுமை, மொழி ஆளுமை, கவித்துவ நேர்த்தி போன்ற பல்வேறு சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் எளிய புதுக்கவிதை நாடகம்தான் மதுரை அரசி. -ந. ஆவுடையப்பன். நன்றி: தினமலர், 6/4/2014.
—-
திருக்கோளூர் ரகசியங்கள், ஸ்ரீவ. ந. கோபால தேசிகாச்சாரியார், அட்சரா பதிப்பகம், பக். 506+10, விலை 395ரூ.
இந்நூல் உரைநடையில் அமைந்த பக்தி இலக்கியம். சிறுகதைத் தொகுப்புபோல படித்து இன்புறலாம். ராமாயண பாரத பாத்திரங்கள் பற்றியும், ஆழ்வார்கள், ராமானுஜர் மற்றும் பலர் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளன. மதுரகவியாழ்வார் அவதரித்த திருக்கோளூரிலிருந்து வந்த அம்மையார் ஒருவர், ராமானுஜரை பார்த்தபோது அவருடன் உரையாடினார். அந்த உரையாடலில் இடம் பெற்ற திருமாலடியார்களின் பக்தியை விளக்கும் திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கும் அரிய நூல் இது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 77 கட்டுரைகளில் எந்த ஒன்றையும், எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெறலாம். வைணவ, அன்பர்களுக்கு திருமாலின் அருட்கடலின் அமுதத்தை பருகும் வாய்ப்பாக இந்த நூல் அமையும் என்பதில் ஐயமில்லை. -பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 6/4/2014.