மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்
மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ.
மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக நூலாசிரியர் பதிய வைத்துள்ளார். தாவரங்களுக்கு உயிரும், உணர்வும் இருப்பதுடன், மனித பிறப்பு, இறப்புடனும் தொடர்பு இருப்பதாகவும் நூலாசிரியர் 16வது அம்ததியாயத்தில் வலியுறுத்துகிறார். மறுபிறப்பும் மரணத்துக்கு அப்பாலும் என்பது தொடர்பாக படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொது அறிவைப் பெற விரும்பவுபவர்களுக்கும் இந்த நூல் ஆக்கபூர்வமான பலனைத் தரும். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.
—-
துரோகச் சுவடுகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
நட்பும், நம்பிக்கையும் களமிறங்கும்போது, கூடவே துரோகமும் இறங்கிவிடுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதன் தம்மை உணரும்போதோ திரும்பிப் பார்க்கின்ற போதோ சுவாரஸ்யங்களுடன் துரோகமும் களை போன்று தெரிகிறது. அதற்காக வருந்தாது, பிடுங்கி எரிந்துவிட்டுச் செல்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய கருத்தை மையமாக வைத்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பிரபல எழுத்தாளருமான வெ. இறையன்பு 13 தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளது. வேலிமேய்ந்த வயல்கள், அமுக்கப்படும் அங்கீகாரம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட தகவல்கள் அனைத்தும் சிந்திக்க தூண்டுகின்றன. துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நூலை படித்து ஆறுதல் அடையலாம். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.