சடையன் குளம்

சடையன் குளம், ஸ்ரீதர கணேசன், கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 250ரூ.

ஒரு தலித் குடும்பத்தின் வாழ்க்கையைக் கதையாக எழுதுவதென்றாலும் அது சாதிய மோதலின் வரலாறாகத்தான் எழுத முடிகிறது. மானுட மறுப்புக்கான எதிர்வினைதான் நாவலின் அடித்தளம். தலித் சமூகத்தின் நல்லையாவுக்கும் தொடிச்சுக்கும் அவர்கள் மண வாழ்க்கையின் கொண்டாட்டங்கள் மறுக்கப்படுவதில் தொடங்கும் அவலம் நாவலின் கடைசிவரை செல்கிறது. தலித்துகளும், அருந்ததியர்களும் வேலை வாய்ப்புகளுக்காகப் பணிந்தாக வேண்டும். சாதியம் தன் பரப்பை விரித்துக்கொள்வதை ஸ்ரீதர கணேசனின் நாவல் தன் போக்கில் வலுவாகச் சொல்கிறது. மேல் சாதியின் கருணையாலோ அனுமதியாலோ தலித்துகளுக்குச் சில வரங்கள் கிடைக்கலாம். ஆனால் வாழ்க்கை கிடையாது. காதலாக இருந்தாலும் வணிகமாக இருந்தாலும் அவை சாதியத்தின் எல்லைக்குள் மோதல் போக்குகளாகத்தான் உருவெடுக்கின்றன. நல்லையாவும் அவர் குடும்பமும் செங்கல் சூளை அமைத்துத் தொழில் தொடங்கினால் கொல்லப்படுகிறார்கள். பாதிரியார்களும் சிஸ்டர்களும் கிராமத்திற்குள் நுழையும்போது அவர்களின் படபடப்பு ஓரளவேனும் நீங்குகிறது. வாழ வழியில்லாத மேல் சாதி விதவைகளும் பாதிரியாரின் அரவணைப்புக்குள் வரும்போது சாதியத்தின் மேலாண்மை சரிகிறது. தலித்துகளும் மேல் சாதியினரும் ஒரே அமைப்பின் கீழ் உணவருந்தும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் இவையெல்லாம் சாதிய சக்திகளின் தந்திரத்தில் அழிக்கப்படுகின்றன. நிஜ வாழ்வின் அப்பட்டமான கூறுகளோடு நாவல் இயங்குவதால் சமூகப் பிரிவினைகளின் கோர முகங்கள் தயவு தாட்சண்யமின்றி கிழிக்கப்படுகின்றன. சார்புகளற்ற சித்திரிப்பால் படைப்பின் மீது நம்பகத்தன்மை உண்டாகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தின் எழுச்சி கூடாது என்பதில் பிற சாதியினரிடையே ஒத்த அணுகுமுறை உள்ளது. அதனால்தான் தலித் புதுமணத் தம்பதியின் வாழ்க்கைப் பயணத்தின் கதை சாதிப் போராட்டமாக வீட்டுச் சுவர்களின் வெளியே பரவுகிற ரணகளங்களாக மாறுகிறது. ஆதிக்க சக்திகளும் பெருவாழ்வு வாழவில்லை. அங்கேயும் வறுமை கூத்தாடுகிறது. இதனால்தான் கீழ்நிலையிலுள்ளோர் சற்றே மேம்பட்டாலும் அதைப் பொறுத்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை. தீ வைத்தல், கொலை என எதிர்வினைகள் விபரீத வடிவம் எடுக்கின்றன. எதிர்ப்பு சக்தியைத் திரட்டி ஊராட்சித் தேர்தலை எதிர்கொள்ளப் போகும்போது இந்திய ஜனநாயம் நமக்கு அளித்திருக்கின்ற அந்த ஒப்பற்ற வாய்ப்பை எண்ணி ஒரு வாசகர் திருப்தியடையலாம். ஆனால் தலித், அருந்ததி சமூகம் வெற்றிபெறலாம் என்ற சூழல் உண்டானதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது. சாதிய வெறியாட்டமும், காவல்துறையின் செயல்பாடுகளும் சர்வாதிகார விசித்திரத்தை உண்டாக்குகின்றன. வெற்றியை மட்டுமின்றி ஏற்கனவே இருந்ததையும் இழந்து அல்லலுறும் காட்சியுடன் நாவல் முடிவடையும்போது துக்கம் கவ்வுகிறது. சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, கொண்டாட்டம் என்கிற மானுட இன்பங்களை இவர்கள் அடையப்போகும் அந்த நாள் எப்போது எனும் அறச் சீற்றத்தை தலித் அல்லாத வாசகர் மத்தியிலும் எழுப்பவைக்கும் வல்லமை கொண்ட நாவலை ஸ்ரீதர கணேசன் படைத்துள்ளார். -களந்தை பீர்முகம்மது. நன்றி: தி இந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *