காஞ்சி மகானின் கருணை அலைகள்
காஞ்சி மகானின் கருணை அலைகள், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், செங்கைப்பதிப்பகம், செங்கல்பட்டு, விலை 300ரூ.
நடமாடும் தெய்வமாக போற்றப்பட்ட காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு, அவர் ஆண்டுவாரியாக மேற்கொண்ட யாத்திரைகள் பற்றிய விவரங்கள், நாட்டின் பெரும் தலைவர்கள் அவரை சந்தித்தபோது நடைபெற்ற அதிசய-ருசிகர தகவல்கள் போன்றவை மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் அவர் நடத்திய உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. இவற்றுடன் காஞ்சி மடாதிபதியை சந்தித்த பலரின் அற்புத அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காஞ்சி மகானைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள உதவும் புனித நூல்களில் இதுவும் ஒன்று. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.
—-
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை முதல் தொகுதி 350ரூ, இரண்டாம் தொகுதி 390ரூ.
பேரறிஞர் அண்ணாவின் முக்கிய சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. துறையூரில் 22/8/1937ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அண்ணா பேசினார். அப்போது அவருக்கு வயது 28. அந்த முதல் சொற்பொழிவு, முதல் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. அண்ணா மறைவதற்கு முன் கடைசியாக நிகழ்த்திய சொற்பொழிவு 14/1/1969ல் சென்னை தி.நகரில் நடைபெற்ற கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் பேசியதாகும். நூலின் கடைசியில் அது இடம் பெற்றுள்ளது. தி.மு.க. மாநாடுகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், டெல்லி ராஜ்யசபையில் (மேல்சபை) பேசிய பேச்சுகள் உள்பட மொத்தம் 139 சொற்பொழிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிறந்த கட்டமைப்புடன் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.