சாதனையின் மறுபெயர் சர்.சி.பி.
சாதனையின் மறுபெயர் சர்.சி.பி., ச. இராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 165ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-3.html ஒரு மனிதனின் உயர்வு என்பது அவருடைய தாயார் அவரை வளர்க்கும் விதத்தில் இருக்கிறது என்பார்கள். இது சர்.சி.பி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட சட்ட மேதை, திருவாங்கூர் திவானாக இருந்து, பல பிரச்னைகளையும் எதிர்கொண்ட சி.பி. ராமசாமி அய்யருக்குப் பொருந்துகிற மாதிரி வெகு சிலருக்கே பொருந்தும். சி.பி. அவர்களின் கொடையுள்ளம் அவருடைய தாயார் ரங்கம்மாள் தந்த சீதனம். இருபத்து மூன்று வயது இளைஞராக இருந்த சி.பி. வருவாய் ஏதுமில்லாத ஒரு வழக்கறிஞராக இருந்தார். அப்போது அவருடைய நண்பருக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. அவருக்கு உதவுவதாக முன்பே கூறியிருந்தார் சி.பி. கையில் பணமில்லாத நிலையில் நண்பருக்கு எப்படி உதவுவது என்ற கவலை ஏற்பட்டது. இதை அறிந்த தாயார் ரங்கம்மாள் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து அவருடைய நண்பருக்கு உதவுமாறு சொன்னாராம். கொடுத்த வாக்குறுதியை எந்த நிலையிலும் காப்பாற்ற வேண்டும் என்பதே அந்தத் தாயார் மகனுக்குக் கூறிய அறிவுரை. அதைக் கடைசிக் காலம் வரை பின்பற்றியவர் சி.பி. ரங்கம்மாள் உண்மையான முற்போக்கு எண்ணம் கொண்டவரும்கூட. தேசிய இயக்கத்தில் பிரபலமாக விளங்கிய அலி சகோதரர்கள் முகம்மது அலியும் ஷௌக்கத் அலியும் சென்னை வந்தபோது சி.பி.யி.ன் இல்லத்தில் தங்கினார்கள். ஒரு சனாதன ஹிந்து பிராமணர் வீட்டில் முஸ்லிம்கள் விருந்தினராகத் தங்குவதற்கு உறவினர்கள் எதிர்ப்பு. சி.பி. வளைந்து கொடுக்கவில்லை. விளைவு, அந்தக் குடும்பத்தையே சமூகத்தைவிட்டு விலக்கி வைத்தார்கள். பூஜை செய்யவும் யாரும் வரமறுத்தார்கள். தயங்காத ரங்கம்மாள் காஞ்சிபுரத்திலிருந்து கிட்டா என்ற சிறுவனை அழைத்துவந்து அவனுக்குத் தாமே பூஜை முறைகளைப் பயில்வித்தாராம். தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தைகளைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக ஒரு வழக்கு. இதில் அன்னி பெஸன்ட் அம்மையாரையே சி.பி. எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தீர்ப்புக்குப்பின் சி.பி.யின் கட்சிக்காரர் அன்னிபெஸன்ட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் விரும்பினார். ஆனால் சி.பி. பழிவாங்கும் மனப்பான்மை அறவே கூடாது என்று தம்முடைய கட்சிக்காரருக்குச் சொல்லிவிட்டார். இதுபற்றி அறிந்த பெஸன்ட், சி.பி.க்கு நன்றி சொல்லிக் கடிதம் எழுதினார். உங்கள் பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. வீட்டு வாசலில் தயங்கித் தயங்கி நின்ற ஓர் இளைஞரையே சி.பி. தம்மிடம் ஜுனியராகச் சேர்த்துக்கொண்ட கதை சுவையானது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த இளைஞரை வேறு யாரும் ஜுனியராகச் சேர்த்துக்கொள்ள முன் வரவில்லை. அவரைத் தயங்காமல் தம்மிடம் பணியாற்ற ஏற்றுக்கொண்டதோடு தம்மோடு உணவுப்பந்தி உட்பட எல்லாவற்றிலும் சமநிலையில் வைத்து நடத்தவும் சி.பி. தயங்கியதில்லை. அவர்தான் பிற்கால நாடாளுமன்ற உறுப்பினர், சென்னை மேயர் என்று பல துறைகளிலும் பிரபலமாக விளங்கிய சிவராஜ். திருவாங்கூர் திவானாகப் பொறுப்பேற்ற ஐந்தே வாரங்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவுச் சட்டம் என்று கொண்டுவந்து பாரத வரலாற்றில் தனியிடம் பெற்றவர் சி.பி. அவருடைய நிர்வாக ஆற்றலைப் பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ள நூலாசிரியர் தம்முடைய முன்னுரையில் எடுத்துக்காட்டியுள்ள ஒரு விஷயம் என்றைக்கும் சிந்தனைக்கு உரிய ஒன்றாக இருக்கும். மௌன்ட் பேட்டன் நேருவை 14.2.1948 அன்று சந்தித்துப் பேசும்போது கோபால்சுவாமி ஐயங்காருக்குப் பதிலாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் பிரச்னை சம்பந்தமாகப் பேசுவதற்கு சர் சி.பி.யைத் தற்காலிக அடிப்படையிலாவது நியமிக்கக் கேட்டுக்கொண்டார். காரணம், இந்தியப் பிரதிநிதி காஷ்மீர் பிரச்னையில் தமது வாதங்களைச் சரியாக முன் வைக்கவில்லை என்பதே. நேரு அவருடைய வேண்டுகோளை ஏற்காததால் மௌன்ட்பேட்டன் வருத்தத்துடன் மௌனமானார். அரிய கருவூலமான ஒரு நூல் இது. நன்றி: கல்கி, 8/6/2014.