நீர் கொத்தி மனிதர்கள்
நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-5.html தண்ணீர் வணிகமயம் ஆக்கப்பட்டிருக்கும் காலத்தில் அது சாதிமயம் ஆக்கப்பட்டிருப்பதைத் தோலுரித்துக் காட்டும் புதினம் நீர் கொத்தி மனிதர்கள். அபிமானியின் கவிதைகள், சிறுகதைகள், தமிழ்ப் படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அவரது அனுபவக் கிடங்கு ஆழமானது. கட்டவிழ்க்க முடியாத வலிகளோடு நிரம்பிக் கிடப்பது. அதன் ஒரு பகுதியே இப்புதினம். அணிந்துரையில் தண்ணீர் கொடுமையை முன்னிறுத்தித் தமிழில் முதலில் வரும் தலித் எழுத்து இது என்கிறார் பா. செயப்பிரகாசம். பல சாதியினர் வாழும் கிராமத்தில் பறையருக்கு நீர் மறுக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் துயரங்களையும் போராட்டங்களையும் இப்புதினம் விவரிக்கிறது. நெல்லை வட்டார மொழி கதையின் உயிர் நரம்பாகி அபிமானியின் செய்நேர்த்திக்கு மெருகூட்டியுள்ளது. பொன்னாபரணம், அவள் கண்வன் பிச்சையா, அவர்களுடைய நான்கு மக்கள். இந்தக் குடும்பமே நீர் கொத்தும் மனிதர்களுடன் போராடும் முன்னணிப் படை. ஊரில் ஒரு பஞ்சாயத்துக் கிணறு. அது சாம்பாக்கன்மாருக்குப் பாத்தியப்பட்டது. சர்வோதய சங்கத்தில் ஒரு குடிநீர்க் குழாய். அது மேல்சாதிக்காரர் பிடிப்பது. அவசரத்துக்குப் பறையர் பெண்கள் குழாயடிக்குச் சென்றால் ஆதிக்கச் சாதிப்பெண்கள் அனுமதிப்பதில்லை. ஆறேழு ஆண்டுகளாய் வறட்சி. கிணற்றில் ஊறுவதோ சொற்ப நீர். அதை மேல்சாதியினர் அபகரிப்பதும் குழாயடியில் தீண்டாமை ஆட்சி செலுத்துவதும் சாம்பாக்கன்மார் குடும்பங்களைத் திணறடிக்கிறது. இரவில் பிச்சையா பொன்னாபரணத்தோடு உடலுறவு கொள்ள எத்தனிக்கிறார். அப்போது மனைவி கேட்கும் கேள்வி உக்கிரமானது. உழைப்பவன் வீட்டில் நீரில்லாவிட்டால் தாம்பத்தியம் கூடச் சிரமம் என்று சமூகத்தின் கன்னத்தில் அறைகிறார் அபிமானி. பூசாரி தாத்தா இறக்கிறார். ஈமச்சடங்கின்போது குளிப்பதற்குக்கூட நீரில்லை. தண்ணீரைத் தலையில் தெளித்துச் சடங்கு முடிக்கப்படுகிறது. எழவுக்குக்கூட நீரற்ற நிலை. ராணியின் மீது நெருப்பு பற்றுகிறது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அவளைக் காப்பாற்ற இயலவில்லை. மெல்ல அவளது உயிர் பிரிகிறது. ஊரில் மேனிலை நீர்த்தொட்டி கட்டப்பட்டுகிறது. அங்கும் தீண்டாமை தலைதூக்குகிறது. பறையர்கள் போராடுகிறார்கள். புதினத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரம் பிச்சையாவின் மகன் வெள்ளையன். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது எதிர்வினை புரிபவன். சிறு வயதில் தேவரின் கணுக்காலை வெட்டிவிட்டு பம்பாய் ஓடுகிறான். மீண்டும் ஊர் திரும்பியபோது பறையரின் நீர் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து நீர்த்தொட்டியில் புதிய குழாய் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வெகுண்டு அதைப் பிடுங்கி எறிகிறான். இதை அடுத்துப் பறையர்கள் ஒன்று திரளவும் நீதிகிடைக்கவும் வழி ஏற்படுகிறது. சொலவடைகளும், வட்டாரச் சொற்களும் விரவி மண்வாசனை கமழும் வகையில், எந்தப் பிசிறும் இல்லாமல் கச்சிதமாக இப்புதினத்தைச் செதுக்கியுள்ளார் அபிமானி. -இலா. வின்சென்ட். நன்றி: தி இந்து, 11/6/2014.