கற்றாழை
கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ.
மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் பனியன் கம்பெனிகளை நம்பி வாழும் எண்ணற்ற ஜீவன்களை, நாவலாசிரியர் நாவலின் இறுதியில் தீட்டிக் காட்டும்போது, கண்கள் பனிக்கின்றன. உள்ளத்தை உருக்கும் உன்னத நாவல். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 29/6/2014.
—–
பள்ளி உளவியல், முனைவர். பாஞ். இராமலிங்கம், தமிழ்ப்புதுவை வெளியீடு, பக். 264, விலை 300ரூ.
கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவருக்கும் தேவையான பள்ளி உளவியல் பற்றி, நூலாசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். மாணவர்களிடம் கல்வி மேம்படுவதற்கு, பள்ளி உளவியல் தோற்றம், வளர்ச்சி பற்றி, எளிய முறையில், தெளிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது, பாராட்டுக்குரியது. மாநிலங்கள் அடிப்படையில், மக்கள் தொகை, எழுத்தறிவு நிலை, பள்ளி கல்வி மாணவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உளவியல் அறிஞர்களின் கருத்துகளை கூறி, ஆளுமை வளர்ச்சிக்கு வழிகாட்டி உள்ளார். இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள, தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் அருஞ்சொற்பொருள் பட்டியல்கள், ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. -பேரா. ம. நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 29/6/2014.