அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு வழுக்கிச் செல்லும் கதை. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு ராமாயணச் சம்பவமும் இந்நாவலில் வேறொரு கோணத்தில் சொல்லப்படுகிறது. அறிவுக்கு மீறிய எந்த அதிமானுடச் சம்பவமும் அறவே இதில் இல்லை. இது அசுரர்களின் அரசன் ராவணனின் கதை. அவன் வாய்மொழியாகவும் பத்ரன் எனப்படும் குடிமகனின் வழியாகவும் விரிகிறது. புராணக் காப்பியங்களில் இருக்கும் தெய்வத்தன்மையை நீக்கிவிட்டு ராமனும் ராவணனும் மனிதர்களாக உலாவருகிறார்கள். இலங்கையை தன் மாற்றாந்தாய் மகன் குபேரனிடமிருந்து கைப்பற்றுவதற்கு முன் ராவணன் மிகச் சாதாரண மனிதனாக இருக்கிறான். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்து பிராமண விஷ்ணுவால் விரட்டப்பட்ட மகாபலியை சந்தித்து அவரிடமிருக்கும் வீரர்களுடன் இலங்கைக்குப் போய் குபேரனிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறான். கடற்பிராந்தியத்தில் வரும் கொள்ளைக்காரத் தலைவனாக வருணன். வடக்கே இருக்கும் அரசுகளை ஆள்பவர்களாக தேவர்கள். அவர்களால் விரட்டப்பட்டு தெற்கே வசிக்கும் மனிதர்களாக அசுரர்கள். இடையில் குரங்கு மனித தோற்றத்துடன் வாலி, சுக்ரீவன், அனுமான், அங்கதன். சீதை ராவணின் மகள் என்கிறது இந்நாவல். இறுதியில் படைகளுடன் சென்று விபீஷணன் ராமனுடன் சேர்ந்துகொள்ள, போரில் ராவணன் கொல்லப்படுகிறான். தன் மனைவி சீதையை நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொல்லுமாறு பிராமண பண்டிதர்கள் கூறுகையில் அதை மறுக்கமுடியாமல் நிராதரவாய் ராமன் நிற்கிற காட்சியும் பத்ரனின் கூற்றாக வருகிறது. பல இடங்களில் இந்நாவல் மக்கள் மீது ஆட்சியாளர்கள் செலுத்தும் அதிகாரத்தையும் கருப்பு நிறத்தில் இருந்த அசுரமக்களை சாதிய கட்டுப்பாடுகளைத் திணித்து ஒடுக்குவதையும் பேசுகிறது. 2012ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நாவல், வாசிப்பவர்களுக்கு அமிஷ் திரிபாதியின் Immortals of Meluha வை நினைவூட்டும். ஆனால் அதிலிருந்து இது வேறுபடுவது ராவணனும் பத்ரனும் பேசும் அரசியலில்தான். வரலாற்றில் எந்த சம்பவமும் அழிந்துபோய்விடுவதில்லை. எங்கோ வெவ்வேறு வடிவங்களில் காலந்தோறும் முளைத்துக்கொண்டே இருக்கிறது. சில உண்மைக்கு நெருக்கமாக, சில உண்மைக்குத் தூரத்தில். நன்றி: அந்திமழை, 1/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *