பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்
பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 100ரூ.
இசையே சிவன், சிவனே இசை என்ற சுந்தரர் வாக்குப்படி இசைஞானி சிவஞானி ஆகியிருக்கிறார். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என மாணிக்கவாசருக்கு சிவன் ஆணையிட்டதுபோல், பாவைப் பாடல்கள் பாடிய வாயால் திருப்பள்ளி எழுச்சியையும் பாடவைத்திருக்கிறார். பாவைப் பாடல்கள் 20, திருப்பள்ளி எழுச்சி 10 என்று இசைஞானி அருளியதை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது பெருமை. பாவைப் பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ்பாடி அருள்பெற வைக்கிறார். இங்கே பெண்கள் என்பது மானுடத்திற்கான குறியீடு. உண்மையில் அவர் இருளில் கிடக்கும் ஆன்மாவையே எழுப்புகிறார், சிவன் அருள்பெற. திருப்பள்ளியெழுச்சியில் இறைவனையே எழுப்பி அருள் கேட்கும் உரிமை பாமரனுக்கும் உண்டு என்றே நிறுவுகிறார். நாங்கள் அறுபத்து மூவரில்லை. தவமுனிவருமில்லை. குரல் எழுப்ப ஏழையானோம். கொற்றவனே குற்றமறப் பள்ளி எழுந்தருளாய் என்று சிவனை எழுப்பி அருள் கேட்கும் உரிமை ஏழைக்கும் உண்டென்கிறார். சிவனை உணர்ந்து ஓத வேண்டும். மனத்தை எங்கேயோ வைத்து சடங்குக்காகப் பாடினால் பயன் இல்லை என்ற மூட வழக்கையும் சாடுகிறார். தான் பெற்ற இன்பம் உலகம் பெற இசைஞானி காட்டும் பக்திநெறி என்றே இந்நூலை எண்ணத் தோன்றுகிறது. பாவை பள்ளி எழுச்சி முப்பதும் செப்பினார் வாழியே. நன்றி: குமுதம், 16/7/2014.
—-
வாணிதாசன் கவிதைத் திரட்டு, சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 185ரூ.
இருபதாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் திராவிட இயக்கச் சிந்தனையில் உருவான கவிஞர்களுள், பகுத்தறிவு, கடவுள் எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி சமய எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பல தளங்களில் செயல்பட்டுத் தன் பாடல்களின் மூலம் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களில் வாணிதாசனும் ஒருவர். சீர்திருத்தக் கொள்கைப் பிடிப்புள்ள சமூகச் சிந்தனையாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அவர். பகுத்தறிவுப் பயிர் செழிக்கவும், தன்மானத் தணல் பெருகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்ட வாணிதாசனின் கவிதைகளில் சிலவற்றை இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார் தொகுப்பாசிரியர் மகரந்தன். நன்றி: தினத்தந்தி, 9/7/2014.