போராளிகள்
போராளிகள், மு. செந்திலதிபன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 90ரூ.
சமுதாய நலனுக்காக, தம்மை அர்ப்பணித்து கொள்பவர்களையே, போராளிகள் என்றழைக்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை, பெண்ணுரிமை, கல்வி உரிமை என, சமுதாயத்திற்காக, போராடுபவர்கள் வெகுசிலரே. அந்த வகையில் இந்த நூலில் ஒன்பது போராளிகளின் சமகால வரலாறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து, காந்திய வழியில் போராடி, தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூச்சி. மணிப்பூரில் உண்ணாநிலை அறப்போரில், ஏறக்குறைய 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது வராறு, போராட்டம் குறித்து, இந்த நூலில், நூலாசிரியர் எளிமையாக விவரித்துள்ளார். நூலை படித்து, போராளிகளின் வாழ்வு எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். -ஆர். ஆஞ்சலா ராஜம். நன்றி: தினமலர், 13/7/2014.
—-
உயில் மற்றும் பிற கதைகள், ஜே.பி. தாஸ், தமிழில் சுப்ரபாரதி மணியன், சாகித்ய அகாடமி, சென்னை, பக். 256, விலை 160ரூ.
ஒடிய எழுத்தாளர் ஜே.பி. தாஸ், சரஸ்வதி விருது, சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றவர். 77 வயதாகும் அவர் எழுதிய, 11 சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த கதைகளின் சிறப்பே, எழுத்தாளர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதுதான். பெண்கள் பிரச்னைகள் குறித்தும் சில கதைகள் பேசுகின்றன. அவற்றில் எழுத்தாளர்கள் பற்றிய கதைகள் சிறப்பானவை. முன்னோடி என்று ஒரு கதை. தான் எழுதிய அருமையான நாவல் டிவி தொடருக்காக கன்னாபின்னாவென சிதைக்கப்படுவதை கண்டு, நாவலாசிரியர் மனம் வெதும்புகிறார். கவிதையின் நீண்ட பயணம் என்ற மற்றொரு கதையில், கவிஞராக திறம்பட எழுதியவர், சினிமா பாடல் ஆசிரியராக மாறியதும், தரத்தில் தாழ்ந்து போகிறார். அவரின் வீழ்ச்சி படிப்படியாக சித்தரிக்கப்படுகிறது. ஒடியாவில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கிருந்து தமிழுக்கு இந்த சிறுகதைகள் வந்தாலும், மூலத்தை படிப்பது போன்ற உணர்வை தருகிறது சுப்ரபாரதி மணியன் மொழிபெயர்ப்பு. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 13/7/2014.