வால்மீகி இராமாயணம்
வால்மீகி இராமாயணம், வர்த்தமானன் வெளியீடு, பக்.2000, விலை (நான்கு தொகுதிகளும் சேர்த்து) – 700ரூ.
மனிதனுடைய வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதில் இரண்டு இதிகாசங்கள் தோன்றியுள்ளன. அவைதான் இராமாயணம், மகாபாரதம். இவ்விரண்டு நூல்களுமே தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டு வந்த நூல்கள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தர்மத்தை மாத்திரமே அதிகம் வலியுறுத்துகிறது இராமாயணம். நடத்தியும் காட்யிருக்கிறது. அறம், பொருள், இன்பம் என்பவற்றில் அறத்தை இராமரும், பொருள் இன்பங்களை இராவணனும் தங்கள் இலட்சியமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இராவணன் கடுந்தவம் புரிந்து தேவர்களையும் தலைமிதித்து நிற்கும் ஆட்சிப் பேற்றை வரமாகப் பெறுகின்றான். இராமரோ தன் வாழ்க்கையையே ஒரு பெரும் தவமாகச் செய்து அறத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இராமருக்கும் சீதைக்கும் இடையே உள்ள அன்பே தருமத்தின் அரணாகிறது. கதையில் வரும் மற்ற மாந்தர்களும் உயர்ந்து சிறந்து நிற்கிறார்கள். அண்ணனுக்குப் பணிவிடை செய்வதில் நிகரற்று விளங்கும் இலக்குவன். அண்ணன் சொல்லைச் சட்டமாக ஏற்றுச் செயல்படும் பரதன். தாயன்பே உருவான கோசலை. ஞானியான சுமித்திரை. செருக்கு வாய்ந்த கைகேயி. சற்றே காமத்தால் ஏமாந்து தருமத்தால் கட்டுண்டு துடிக்கும் தயரதன். தூய்மை உள்ளத்தில் குடிகொண்ட இராமபக்தியால் செயற்கரிய செயல்களைச் செய்த அனுமன். இணையற்ற தோழனான சுக்கிரீவன். நெறியற்ற வழியில் சென்ற இராவணனைத் துறந்து இராமனைச் சார்ந்த விபீஷணன். தவறென்று தெரிந்தும் அண்ணன் என்ற பாசத்துக்குக் கட்டுப்பட்டு உயிர் துறந்த கும்பகருணன் ஆகிய இவர்கள் போன்ற எண்ணற்ற பாத்திரங்களை மறக்கவொண்ணா வகையில் தோற்றுவித்துள்ளார் வால்மீகி. இத்தகைய மாந்தர் வாயிலாக வால்மீகி உலகப் போக்கையும், அழிவில்லாத தருமத்தையும் ஒருங்கே விளக்குகிறார். நன்றி: கல்கி, 8/6/2014.
—-
பிருகு முனிவரின் பிருகு சம்ஹிதா, எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், சென்னை, பக். 888, விலை 500ரூ.
பிருகு முனிவரின் ஜோதிட நூல்
இந்து ஜோதிடத்தின் தந்தை என்று புகழ்பெற்றவர் பிருகு முனிவர். அவர் வேத காலத்தில் இயற்றியதாக கருதப்படும் மிகப்பழமையான நூல் பிருகு சம்ஹிதா. ஒரு லக்னத்திற்கு 108 பலன்கள் வீதம் 12 லக்னங்களுக்கு 1926 வித பலன்களை பிருகு முனிவர் இந்த நூலில் கூறியுள்ளார்.
லக்ன அடிப்படையில் பலன்களைக் கூறும் முதல் நூல் இதுவே. வடமொழியில் இயற்றப்பட்ட இந்த நூலை (887 பக்கங்கள்) அழகிய நடையில் தமிழாக்கம் செய்துள்ளவர் எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன். ஜோதிட கலையில் தொடர்புள்ளவர்களுக்குப் பயனளிக்கும் நூல்.
நன்றி: தினத்தந்தி, 2/7/2014.