ஜுலியஸ் சீஸர்
ஜுலியஸ் சீஸர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 160ரூ.
கிரேக்கத்தின் அலெக்சாண்டர், மங்கோலிய செங்கிஸ்கான், பிரெஞ்ச் நெப்போலியன், ரோமானிய ஜுலியஸ் சீஸர் ஆகியவை மறக்க முடியாத வீரப்பெயர்கள். இதில் சீஸர் பற்றியப் புத்தகம் இது. சீஸரை விலக்கிவிட்டு, வீரம் பற்றிப் பேச முடியாது. சீஸரை தவிர்த்துவிட்டு, பண்பு பற்றி பேச முடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சமங்களை ஆராய முடியாது என்ற கம்பீரத்துடன் இந்தப் புத்தகத்தை எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியிருக்கிறார். சீஸரைப் பற்றி எழுதுவதாலேயே சொற்களும் கூர்மையாக இருக்கின்றன. வரலாறு ஆர்வலர்களுக்கு அகஸ்ட்டஸ் சீஸர், ஜுலியஸ் சீஸர், மார்க் ஆன்டனி ஆகிய பெயர்கள் பரிச்சயம். இதில் உச்சம் ஜுலியஸ் சீஸர். போர், காமக்களியாட்டம், சூழ்ச்சி வலைகள், உயிர்கொடுக்கும் நட்பு, மக்களுக்கான நலத்திட்டங்கள் என எதை எடுத்தாலும் அதில் ரோமானியர்கள் உச்சம் தொட்டார்கள். இந்த உச்சத் தேடல் அத்தனையும் திரண்டெழுந்து வந்தால், அந்த உருவம் ஜுலியஸ் சீஸர். இவர் வெல்லாத போர்கள் இல்லை. கொல்லாத எதிரிகள் இல்லை. இவர் வெட்டிச் சாயத்த வீரர்கள் அதிகமா? கொஞ்சல் பேச்சால் கட்டிப்போட்ட வஞ்சிக்கொடிகள் அதிகமா?- பதில் தேட முடியாத இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடுகிறார் மூர்த்தி. ஜுலியஸ் என்றால் முழுமுதற் கடவுள் ஜுபிடரின் மகன் என்று அர்த்தமாம். ஆனால் சீஸர் இறந்தபோது, ரோமானியக் கடவுள்களில் சீஸரும் ஒருவர் என்று செனட் சபை தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு மக்கள் செல்வாக்கை அள்ளினார். ரோமாபுரி எப்போதும் சுகபோகிகளின் நாடு. ஆண்டு முழுவதும் வசந்த காலம் வீசும். அந்த தேசத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரோம் சாம்ராஜ்ஜியத்தின் கான்சலாக சீஸர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 41. இன்றைய குடியரசுத் தலைவர் பதவிக்கு இணையான பதவி அது. மண், பெண், புகழ் ஆகிய மூன்றையும் தேடித் தேடி அனுபவித்தார் சீஸர். ஆனால் அவர் எப்போதும் மதுவுக்கு அடிமை ஆனது இல்லை. எகிப்து அழகி கிளியோபாட்ராவை விழியால் வீழ்த்தியதை வர்ணிக்கும் மூர்த்தி, சீஸர் பெண்ணாசை மிக்கவர், ஆனால் பெண்ணா மண்ணா என்றுகேட்டால் மண்தான் அவருக்கு முக்கியம். உலகப் பேரழகியானாலும் அவருக்கு இரண்டாம்பட்சம்தான். சீஸரின் காரணங்கள் முழுக்க முழுக்க அரசியல் கணக்குகள்தான் என்கிறார். சீஸர் நண்பர்களுக்கு உயிரையும் கொடுப்பார். திறமைசாலி. நண்பர்களுக்கு பதவிகளும் கொடுத்தார். ஆனால் அவர்கள் துரோகம் செய்ததால் இரண்டு மடங்கு தண்டனையைத் தந்தார். தன்னுடைய ஆத்மார்த்த நண்பன் மார்க் ஆன்டனிக்கே, அரசியல் பதவியில் இருக்கக்கூடாது என்று தண்டனை கொடுத்தவர் சீஸர். மண்போதை, பெண்போதையைத் தாண்டி சீஸரிடம் இருந்து படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 4/6/2014.