திருலோக சீதாராம்
திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ.
திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக விளங்கியவர். ஓர் அசாதாரண மனிதரான திருலோக சீதாராமைப் பற்றிய ஏராளமான விவரங்களை தமிழ்ப் படைப்பாளர்களுடன் நெருங்கிய நேசம் பூண்ட நூலாசிரியர் தனது நூலின் மூலம் வாசகர்களுக்குத் தந்துள்ளார். கவிஞர் திருலோக சீதாராம் குரலில் நேரிடையாகப் பாஞ்சாலி சபத காவியத்தைக் கேட்க கொடுத்து வைத்தவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். எனக்கு அந்தப் பெரும்பேறு கிட்டியதில் எப்போதும் பெருமிதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளது நமக்கு அந்த போக்கியம் கிட்டவில்லையே என ஏங்க வைக்கிறது. ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த திருலோக சீதாராம் பொருளாதார வசதியை அடையவே இல்லை என்பது நெஞ்சைப் பிழியும் நிஜம் என்று நூலாசிரியர் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். நன்றி: தினமணி, 22/9/2014.
—-
இலக்கியங்களில் நல்லறம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 45ரூ.
இன்றைய இளைஞர்கள் நல்லெண்ணத்துடனும் மனித நேயத்துடனும் வாழ இலக்கியங்களில் உள்ள நல்லறங்களை எடுத்துக்காட்டி அறிவுரை வழங்கியுள்ளார் நூலாசிரியர் பஷீரா ரசூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.