இளைப்பாறும் சுமைகள்
இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு இருக்கிறது. இளைப்பாறும் சுமைகள் சிறுகதைத் தொகுப்பும், அந்த வகையைச் சேர்ந்தது. இந்த தொகுப்பில், தவிப்பு என்ற சிறுகதை, என்னை பெரிதும் பாதித்தது. அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளில் ஒன்ற பேசுவதுதான் இந்த சிறுகதை. அடிமாட்டுக்காக, லாரியில் ஏற்றும் போதிருந்து, அது செல்லும் இடம் வரை கதை நீள்கிறது. கடும வெயிலில், லாரியில் ஏற்றப்படும் மாட்டுக்கு, பசி, தண்ணீர் தாகம். ஆனால் எதுவும் கிடைப்பதில்லை. மனிதன் மீது மனம் நொந்து பேசும் மாடு, நானாவது செத்தால் உனக்கு உணவாகிறேன். ஆனால் நீ? என மனிதனைப் பார்த்து கேட்கிறது. தூக்கிலிடப்படும் மனிதனிடம், உன் கடைசி ஆசை என்ன? என, கேட்கின்றனர். ஆனால் உணவுக்கு கொல்லப்படும் எங்களுக்கு, கடைசி நேரம் வரை கூட, தண்ணீர் கொடுக்காமல் வதைத்து கொல்கின்றனரே என, அடிமாடு பரிதவிப்பது, நமக்கு பெரும் தவிப்பை ஏற்படுத்துகிறது. கேள்விக்குறி என்ற மற்றொரு சிறு கதை, வீட்டு வேலை செய்யும் பெண்ணின் நிலையை எடுத்துரைக்கிறது. அவள் கர்ப்பிணி. இடுப்பு வலி வந்து, மருத்துவமனை போகும் வரை, அவள் வேலை பார்த்தால்தான் சம்பளம். வீட்டுக்கு சொந்தக்காரி ஆசிரியை. அவளும் மகப்பேற்றுக்கு காத்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு, ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு. பிரசவத்துக்காக நன்றாக சாப்பிட்டு, மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகிறாள். கருவுற்று இருக்கும் இரு பெண்களும் ஒரே சமூகத்தில் வாழ்வோர்தான். ஆனால், ஒருத்திக்கு அனைத்து வசதிகளும், வாய்புகளும் கிடைக்கிறது. மற்றொருத்திக்கு, எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்ன என்பதே கேள்விக்குறி சிறுகதை. -வேலாயுதம், விஜயா பதிப்பகம். நன்றி: தினமலர், 1/2/2015.