நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா
நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, நிழல் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
தமிழ் சினிமா உலகில் வரலாறு படைத்த சிறந்த நடிகர் டி.எஸ். பாலையா. தொடக்கத்தில் வில்லனாக நடித்து வந்த பாலையா, பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். அவ்வளவு ஏன்? சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் அவருக்கு ஜோடி பத்மினி. சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார் பாலையா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள பாலையா இளைய தலைமுறையுடனும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள டி.எஸ். பாலையாவின் வாழ்க்கை வரலாற்றை திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார். பாலையா பற்றியும், படவுலகம் பற்றியும் ஆச்சரியமான புதிய தகவல்கள் பலவற்றை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். படித்து ரசிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 07/1/2015.
—-
வானொலியில் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வானொலி சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிகள், மொழி வழி மாகாணங்கள், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாட்டுக்கொரு புலவன் பாரதி உள்பட 9 சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன. வேகமும், வீச்சும் கொண்ட சொற்பொழிவுகள். அன்று கேட்டு மகிழ்ந்தவற்றை இன்று படித்து மகிழும் வகையில் வெளியிட்டுள்ளனர். நூலின் விலை 50ரூ. கம்பராமாயணம் பற்றி கம்பர் கவியின்பம் என்ற தலைப்பில் ம.பொ.சி. எழுதிய புத்தகமும் வெளிவந்துள்ளது. விலை 90ரூ. நன்றி: தினத்தந்தி, 07/1/2015.