ஜீவா பார்வையில் கலை இலக்கியம்
ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.
கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா. மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார். உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், ஜீவா தன் மனத்தில் பதியம் போட்டிருந்ததை, நூலாசிரியர் ஜீவபாரதி அழகாக தொகுத்து தந்துள்ளார். ஜீவாவின் ஆளுமைக்கு, இந்த இலக்கியங்கள் தான் அடிப்படையாய் அமைந்தன எனலாம். தமிழ் இலக்கிய பாரம்பரியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஜீவா கொண்டிருந்த தெளிவுக்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. இந்த யுகம் சோஷலிச யுகம். இந்த மகத்தான யுகத்தை உருவாக்கி வரும் படைப்பு கலைஞர்கள், மகத்தான பாட்டாளி பெருமக்கள். புதிய இலக்கியம், இந்த யுகத்தையும் இதன் சிற்பிகளான கோடானுகோடி மக்களையும் எதிரொலிக்கிறது (பக். 85). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 8/3/2015.
—-
சுழலும் கோள்காளல் விளையும் நிகழ்வுகள், கி. சங்கரநாராயணன், கருட ஆழ்வார் பதிப்பகம், திருநெல்வேலி, விலை 80ரூ.
ஜோதிட இயலின் அடிப்படைத் தத்துவம் புரிந்தவர்களுக்கும் அதனை ஆய்வு செய்து அனுபவம் பெற்றவர்களுக்கும் அதனை ஆய்வு செய்து அனுபவம் பெற்றவர்களுக்கும், அன்றாடம் ஜோதிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பொக்கிஷமாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.