கயல் பருகிய கடல்
கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ.
இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். இக்கதை 1915ம் ஆண்டில் எழுதப்பட்டது. மாலன் தமது ஆய்வு மூலம், தமிழின் முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரம் என்பது தவறு. காரணம் அது, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய காட்டேர் கதா என்ற வங்காள மொழிக்கதையின் தழுவல் என்று கூறுகிறார். பாரதியார் எழுதிய ஆற்றில் ஒரு பங்கு என்ற கதைதான், தமிழின் முதல் நவீனச் சிறுகதை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இது போன்ற அரிய இலக்கியச் செய்திகள் இந்த நூலில் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.
—-
கனவு சினிமா, டிஸ்கவரி புக் பாலஸ், சென்னை, விலை 100ரூ.
சினிமாவுக்கு கதை எழுத வேண்டும், நடிக்க வேண்டும், டைரக்ட்டராக வேண்டும்… இப்படி பலவித ஆசைகளுடன் தினம் சென்னைக்கு ரெயிலில் வந்து இறங்குபவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்கள் பெறுகிற அனுபவங்கள் என்ன? லட்சியம் நிறைவேறுகிறதா? உண்மையும் கற்பனையும் கலந்து எழுதியுள்ளார் க. மணிகண்டன். நன்றி: தினத்தந்தி, 18/2/2015.