மதில்கள்

மதில்கள், வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்.

விடுதலையை விரும்பாத காதல் வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தில் எழுதி சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மதில்கள் நாவலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறுநாவலான மதில்கள் மலையாளத்தில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்த நாவல், பஷீரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எழுத்தாளரான அவர், அரசுக்கு எதிராக எழுதும் கருத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் இருக்கும் சிறைக்கு, அடுத்த அறையில் நாராயணி என்ற பெண் கைதி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அரும்பும் காதல்தான் நாவல். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளமாட்டார்கள். பக்கத்து அறை என்பதால், இருவரும் பேசிக்கொள்வர். இதில்தான், காதல் மலர்கிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதல் கதைகள், வந்து கொண்டே இருந்தாலும், பஷீரின் மதில்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான உறவை மிக நாகரிகமாக சொல்கிறது. இதனாலேயே இந்த நாவல் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. என் நண்பர் ஒருவர் தமிழில் பேசினால், புரிந்துகொள்வார். ஆனால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அவருக்காக இந்த நாவலை படித்துக் காட்டினேன். என் வாசிப்பிலிருந்து மதில்கள் சொல்லும் காதலைக் கேட்டு, பிரமித்துப் போனார். சிறையில் இருக்கும் பணீரும், நாராயணியும் நேரில் சந்தித்துக் கொள்ள நாள் குறிக்கின்றனர். கைதிகளுக்கு வழக்கமாக நடக்கும் உடல் பரிசோதனைக்காக, மருத்துவமனை செல்லும்போது, சந்தித்துக் கொள்ளலாம் என, முடிவு செய்கின்றனர். நாராயணியை எப்படி தெரிந்து கொள்வது என்ற, பஷீரின் குழப்பத்துக்கு, நாராயணியே விடை தருகிறார். பூ வைத்துக் கொண்டு வருவேன். என்னை அறிந்துகொள்ளுங்கள் என சொல்கிறார். நாராயணியை சந்திக்கும், விடியலுக்காக பஷீர் காத்திருக்கிறார். ஆனால் விடியலின்போது, அவருக்கு விடுதலை அறிவிக்கப்படுகிறது. தவித்துப்போகும் பஷீர், எனக்கு விடுதலை வேண்டாம்; சிறையிலேயே இருக்கிறேன் என்கிறார். ஆனால் சட்டத்தின் முன் அவர் கோரிக்கை நிறைவேறாது. இதோடு நாவல் முடிகிறது. மிக அற்புதமான சொல்லாடல், பஷீர், நாராயணியின் காதலை ரசிக்க வைக்கிறது. நாவலின் எந்த இடத்திலும், கொச்சையான வார்த்தைகள் இல்லை. இதுவே மதில்கள் வெற்றிக்குச் சான்று. -குட்டி ரேவதி, எழுத்தாளர். நன்றி: தினமலர், 26/4/2015.

Leave a Reply

Your email address will not be published.