மகாபாரதம்
மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ
மகான்களும் மாபாவிகளும் வலம் வரும் காவியம் மகாபாரதம். வியாசன் வடித்தது. அதனுடைய கதைச் செழுமையால் அனைத்து மொழிகளாலும் அரவணைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் பாடல்களாக வடித்தார் தமிழில். வசனமாக கொண்டுவந்து தந்தார் கும்பகோணம் ராமானுசாச்சாரியார். அதிலுள்ள அறத்தை சாறு பிழிந்து கொடுத்தார் நா. பார்த்தசாரதி. கதையை நாடக பாணியில் வர்ணித்தார் பழ. கருப்பையா. இதோ, பிரபஞ்சன் தன்னுடைய கதா ரசனைப்படி மகாபாரத மனிதர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்துள்ளார். உலகத்தின் முதல் தன் வரலாற்றை வியாசரே எழுதியிருக்கிறார். குருசேத்திரப் போர் நிகழ்ந்தபோது, அதைக் காணும் அவலம் அவருக்கு நேரவில்லை. அப்போது அவர் இமயத்தில் இருந்தார். திரும்பியதுமே வியாசர் போரின் கோரத்தைக் கண்கூடாகக் கண்டார். போர் என்பதற்கு அழிவு எப்தைத் தவிர, வேறு அர்த்தம் இல்லை. அந்தத் துறவியின் உள்ளம் மனித தேசம் குறித்துத் துயரம் மீதூறக் கசிந்து நொந்தது என்று வியாசரின் அடிமனத்தின் அதிர்வுகளில் இருந்து தொடங்குகிறார் பிரபஞ்சன். அறம் வலியுறுத்தும் விதுரனையும், அறத்துக்குப் புறம்பான அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டும் திருதராஷ்டிரனையும் பிள்ளைகளாகப் பெற்ற வியாசர், அவர்கள் மூலமாக கதையையும் காட்சிகளையும் தத்துவத்தையும் தர்க்கத்தையும் எப்படி நகர்த்திச் செல்கிறார் என்பதை குறிப்பிட்ட பாத்திரங்களை தனித்தனியாக பிரித்து சுவையூட்டுகிறார் பிரபஞ்சன். பிதாமகன் பீஷ்மர், எரியும் தீ திரௌபதி, கர்ணன் என்கிற கைவிடப்பட்டவன், கிருஷ்ணன் என்கிற ஆத்ம சினேகிதன், பரிதாபத்துக்குரிய துரியோதனன், கபட மனத்தினன் திருதராஷ்டிரன், அழகுக்கு நகுலன், சக உயிர் மதிப்புக்கு சகாதேவன், தர்ம தூதர் பலராமர், வரலாறு கண்ட போராளி சாவித்திரி, தீரம் மிகுந்த தமயந்தி, காமக் கடும்புனலாடிய யயாதி…. என்று வந்து போகும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. திரௌபதி கணவர்களுடன் சொர்க்கம் நோக்கி நடக்கிறாள். அவளே முதலில் விழுகிறாள். முதலில் இவள் வீழ்ந்ததால், அவள் செய்த பாவம் என்ன என்று தர்மரிடம் கேட்கிறார் பீமன். நம் எல்லோரையும்விட அவள் அர்ச்சுனனையே அதிகம் நேசித்தாள் என்று தர்மர் சொல்கிறார். குற்ற மனப்பான்மையோடு அகக்கண்ணையும் இழந்தவனான திருதராண்டிரன் கொடுத்த மூன்று வரத்தில் முதல் வரத்தால் தர்மனின் அடிமைத்தளையை விடுவித்து, அப்புறம் நான்கு பேரின் அடிமைத்தனத்தையும் விடுதலை செய்து, மூன்றாம் வரத்தை கேட்காமல் விட்ட திரௌபதியைப் பற்றித்தான் தருமன் இப்படிச் சொல்கிறார். எல்லாக் காலத்திலும் ஆண்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் பெண்கள் இப்படித்தான் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று எழுதுகிறார் பிரபஞ்சன். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசனையுடன் உரசிப் பார்க்கிறது பிரபஞ்சனின் பேனா. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 11/1/2015.