பஞ்சத்தந்திரக் கதை
பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை 200ரூ.
ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, அவர்கள் வடிகட்டின முட்டாள்களாகவும், ராஜ்யத்தை ஆளும் தகுதியற்றவர்களாகவும் இருந்தது மன்னனைக் கவலைக் கொள்ளச் செய்தது. அதனால் அவர்களை ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் வேத விற்பன்னரான ஏழை குரு ஒருவரிடம் ஒப்படைத்து, அவர்களைத் தகுதி உடையவர்களாக உருவாக்க உத்திரவிடுகிறார் மன்னர். அந்த மூன்று இளவரசர்களும் உலக அறிவில் தேர்ச்சி பெற, அந்தக் குரு கூறும் கதைகள்தான் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள். இந்தக் கதைகள் தனித்தனியாக இல்லாமல், ஒரு முக்கிய கதையைத் தொடர்ந்து பல கிளைக் கதைகள் சங்கிலித் தொடராக வருகின்றன. இவை படிப்பதற்கு கொஞ்சம் சோர்வைத் தந்தாலும் அவற்றில் வரும் திருப்பங்களும், காக்கை, குருவி, ஆந்தை, குருங்கு, பாம்பு, நரி, சிங்கம், புலி, காளை, ஒட்டகம், யானை முதலான பல்வேறு கதாபாத்திரங்கள் சமயத்திற்கேற்ப பேசும் சிந்தனை மிக்க கருத்துக்கள், நீதி போதனைகள் விறுவிறுப்பைத் தருவதோடு, வாழ்க்கைக்கும் ஏற்றதாக உள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 12/8/2015.