இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், குமரன் பதிப்பகம், விலை 50ரூ.
இந்திய மக்கள் அனைவருடைய அன்பையும் பெற்று, மக்கள் ஜனாதிபதி என்று புகழ் பெற்றவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவர் திடீரென்று காலமானபோது, இந்தியாவே கண்ணிரில் மிதந்தது. இளமையில் ஏழ்மையில் எதிர்நீச்சல் போட்டு, கல்வியாலும், அறிவாற்றலாலும் அணுசக்தி விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார். ஏவுகணை வீச்சில் சாதனை படைத்து, இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்தார். உலகம் போற்றும் உத்தமத் தலைவரான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை, இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார், எழுத்தாளரும், பேராசிரியருமான நெல்லை கவிநேசன். ரத்தினச் சுருக்கமாகவும், அதே சமயம் அப்துல் கலாமின் வாழ்க்கை, சாதனைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.
—-
கற்றோர் போற்றும் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர் மறைந்த பின்னும் சரி, எத்தகைய பேறு பெற்றுத் திகழ்ந்தார் என்பதனைக் குறித்து அவரோடு கலை, இலக்கியம், அரசியல் எனப் பல துறைகளில் கைகோர்த்துக் கொண்டு பவனி வந்த பெருமக்கள் பலர், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் படைத்த கட்டுரைகளை அருமையாக தொகுத்தளித்திருக்கிறார் ஆர்.பி.சங்கரன். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.