பாரதியார் சரித்திரம்
பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ.
மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/3/2016.
—-
ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்மை வெளியீடு, விலை 120ரூ.
இது ஒரு வித்தியாசமான படைப்பு என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு கவிஞரும் தனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி பாராட்டுப் பெற முனையும் நேரத்தில்தான் சந்தித்த, திறமை மிக்க இருபதுக்கும் மேற்பட்ட இளம் கவிஞர்களை அடையாளப்படுத்துவதுடன், அவர்கள் உருவாக்கிய சிந்தனையைத் தூண்டும் வரிகளைப் போற்றி, அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார் கவிஞர் மு.முருகேஷ். அந்த கவிஞர்களை சந்தித்த விதம், அவர்களின் திறனில் உருவான கவிதைகளில் மனதைக் கவர்ந்தவை என்ற விவரங்களை படிப்பதற்கு சுவாரசியமாக கதைபோல சொல்லி இருப்பது பாராட்டுக்கு உரியது. நன்றி: தினத்தந்தி, 16/3/2016.