வலவன்
வலவன், சுதாகர் கஸ்தூரி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ.
ஓட்டுநர்களின் வரலாறு
வாடகை கார் ஓட்டுநர்களின் உலகமே தனி. அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளர்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக்கொள்ளும் அலாதியான பண்புள்ளவர்கள்.
கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியமம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் என்ற ஓட்டுநர். சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறார் பஷீர். வளரிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம். குடும்ப மரபைக் கைவிட முடியாமல், மனைவியின் இன்னலுக்கு விடை காணும் பழங்குடி இளைஞர், பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து பரிசு வாங்கும் மகள் செண்பகாவின் நிகழ்ச்சிக்காகக் கூட செல்ல முடியாத தகப்பன் முத்து, தெருவில் யுவன்-யுவதியைச் சேர்த்துப் பார்க்கும்போதே கற்பனையைத் தவறாகக் கட்டவிழ்ப்பவர்களுக்குப் பாடமாக டிரைவர் மிஸ்ராவின் குடும்பம், முதலாளி மகன் நிகழ்த்திய விபத்தில் இறந்தவனின் ரத்தமும் துர்வாடையும் காரில் இருப்பதாக நினைத்துத் துடைத்துக்கொண்டே இருக்கும் முகேஷ், காலிஸ்தானியாக இருந்து நல்வழிப்பட்டு கல்லூரிப் பேராசிரியராகி பிறகு டிரைவர் வேலையில் அமைதி காணும் ஹரி சிங் என்று பலதரப்பட்டவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
சில கதைகளை நாவலாகக் கூட எழுதும் அளவுக்கு சாத்தியம் தெரிகிறது. டிரைவர்கள் நம்முடனேயே இருந்தாலும் அவர்கள் உலகம் தனி. இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவர்கள்.
பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் சோடை போனாலும் உலகைப் படிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். எழுத்தாளர்களின் அனுபவம், கற்பனை, நடை மூன்றும் கதைகளை அயர்ச்சியில்லாமல் நகர்த்த உதவுகின்றன.
-சாரி.
நன்றி: தி இந்து, 1/7/2017.