A History of Ancient Tamil Civilization
A History of Ancient Tamil Civilization, ஏ. ராமசாமி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 418, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 053, விலை: ரூ.130.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மிகுந்த தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவற்றுள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் மிகவும் சிறப்பான பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இரும்பு கால நாகரீகத்தின் காலத்தை கணித்தது மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தமிழரின் நாகரிகத்தின் பல பரிமாணங்களை கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் துறை வல்லுநர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ‘தினமலர்’ ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டெடுத்த, ‘சங்க காலத்து பெருவழுதி நாணயம்’ அவற்றுள் முக்கியமானதாகும். அந்த நாணயத்தின் மூலம், சங்க கால அரசர்கள் மிகவும் நிர்வாகத் திறமையும், சமூக வளர்ச்சியும் கொண்டவர்கள் என்பது புலனானது. நிர்வாகத் திறமை மிக்க ஆட்சிகளில் ஒன்றாக சங்க கால அரசர்களையும் நோக்கக்கூடிய கண்டுபிடிப்பு அது. அவர் கண்டெடுத்த பல நாணயங்களை ஆய்ந்தறிந்ததில், பழந்தமிழ் மன்னர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க, பல தகவல்களை நாம் பெற முடிந்தது. தொல்லியல் துறையினர் மேற்கொண்ட பல ஆய்வுகள் மூலமாகவும், தமிழக வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய பல தகவல்கள் வெளிவந்தன. இப்படி பல துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளைச் சார்ந்த தகவல்கள் வெளிவந்தாலும் வரலாற்று ஆசிரியர்கள் ஏனோ தமிழக வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கவில்லை. எனினும், தமிழக உயர்கல்வி இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஒரு சில மாதங்களில், அவ்வல்லுநர்கள் விவரமாக கலந்து ஆய்வு செய்து, ஒரு புதிய தமிழக வரலாற்றுத் தொகுப்பை பரிந்துரைத்தனர். அக்குழுவில் இருந்த பல நிபுணர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இன்றும் வெளியிடப்படவில்லை. எனினும், அக்கட்டுரைகளின் உதவியோடு இந்த தமிழக வரலாற்றுப் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை இதில் வரும் செய்திகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில், இரும்பு நாகரீகத்தின் காலகட்டம் தற்போது கி.மு.2500 லிருந்து கி.மு. 500 வரை இருந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையால், தியாக, சத்தியமூர்த்தியின் தலைமையில் ஆதிச்சநல்லூரில் நடந்த ஆய்வைக் கொண்டு அக்காலத்தை துல்லியமாகக் கணிக்க, பல தொல்லியல் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. (2004 – 2005). பன்முக மக்கள் வாழ்ந்த இடமாக ஆதிச்சநல்லூர் இருந்துள்ளதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. கடல் வழி வணிகம் சிறந்துள்ள ஒரு பன்முக நகரமாக ஆதிச்சநல்லூர் இருந்துள்ளது. இதன் மூலம் தமிழனும், தமிழகமும் பன்னாட்டு தொடர்பையும், கலாசாரத்தையும், வளர்த்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த நூலசிரியர், பல ஆதாரப்பூரவமான தகவல்களை தொகுத்து அளித்துள்ளார். தமிழக கலாசாரத்தின் அம்சங்களாக முற்கால அரசியல், நிர்வாகம், வணிகம், விவசாயம், அக்காலத்து ஆடை அணிகலன்கள், நாகரீகம், மதம் மற்றும் நம்பிக்கைகள், இறந்தவர்களை அவர்கள் புதைக்கும் விதம் என, பல தரப்பட்ட செய்திகளை ஆசிரியர் தொகுத்து வழங்கியுள்ளதை நாம் பாராட்டலாம். உலைகலன்களைக் கையாளுதல் மற்றும் இரும்பு, செம்பு ஆசியவற்றை அவர்கள் திறமையாக உருக்கிக் கையாண்ட விதம் ஆகியவற்றை சென்னை ஐ.ஐ.டி., யின் பேராசிரியர் டி. வெங்கட்ராவ் என்பவர் ஆய்வு செய்ததையும், சங்க கால கவிதைகள், உரைகளையும், அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒப்பிட்டு ஆசிரியர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக வரலாற்றை, சரியாக திருத்தி எழுத, இப்புத்தகம் ஒரு திறவுகோல் என்று சொல்லலாம். தொல்லியல் ஆதாரங்களையும், கண்டுபிடிப்புகளையும் கொண்டு தமிழக வரலாற்றை சீர்படுத்தி எழுத முயன்ற இம்முயற்சியை, தொகுப்பை நாம் பாராட்ட வேண்டும். – தியாக. சத்தியமூர்த்தி. நன்றி: தினமலர் (31.3.2013).