அறிவியல் எது?ஏன்?எப்படி?
அறிவியல் எது?ஏன்?எப்படி?, என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், விலை 450ரூ.
வலி இல்லாமல் அறிவியல்
அறிவியல் செய்திகளை எளிமையாகவும் இனிமையாகவும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர் என்.ராமதுரை. அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றை உதாரணங்களாகக் காட்டி அவற்றின் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை இந்த நூலில் புரிய வைக்கிறார் ராமதுரை.
தமிழில் அறிவியலை சுலபமாக விளக்க முடியும் என்பதற்கான சான்றே இந்த நூல். முதல் பாகத்தில் 100 தலைப்புகள், இரண்டாவது பாகத்தில் 95 தலைப்புகள். தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், வானியல், மருந்தியல் என்று எல்லாப் பிரிவுகளிலும் சிறு கட்டுரைகள்.
ஆறாவது, ஏழாவது படிக்கும் இதைப் படித்தால் நிச்சயம் அறிவியலைத் தவிர வேறு பாடங்களை நாட மாட்டார்கள். “எக்ஸ் கதிர், ஒளிக்கதிர், ரேடியோ அலை, மைக்ரோ அலை அனைத்தும் மின்காந்த அலைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒளி அலைகள் உடலை ஊடுருவிச் செல்லாது, எக்ஸ் கதிர்கள் ஊடுருவூம், அளவுக்கு மீறி எக்ஸ் கதிர்கள் தாக்கினால் திசுக்கள் பாதிக்கப்படலாம். அழிந்தும் போகலாம்.
புற்றுநோய் ஈற்படலாம். மருத்துவ சிகிச்சைக்காக எக்ஸரே எடுக்கும் நோயாளிகள் அஞ்சத் தேவையில்லை. மிகச் சில விநாடிகளுக்கே, அதுவும் திறன் குறைந்த அளவிலேயே கதிர்கள் தேவையான இடத்தில் மட்டும் பாய்ச்சப்பட்டு நோயின் தன்மை அறியப் பயன்படுத்தப்படும். எக்ஸ்ரே இயந்திரங்களில் மட்டுமல்ல, கலர் டி.வி.க்களிலிருந்தும் கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்தும் இக்கதிர்கள் வெளிப்படுகின்றன.
குழந்தைகள் இவற்றுக்கும் மிக அருகில் செல்லக்கூடாது” என்று ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படித்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் செய்திகள் இந்த நூலில் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளன. பரிசளிப்பதற்கு ஏற்ற நூல்.
-சாரி.
நன்றி: தி இந்து, 28/10/2017.