பங்களா கொட்டா
பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ.
சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல்.
தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல்.
நாவலில், காதலையும் மென்னுணர்வுடனும், முறையற்ற காமத்தை விவரிக்கும் இடத்தை நெருடலற்ற நேர்த்தியுடனும் ஆசிரியர் கையாண்டுள்ளார். உணர்ச்சியைத் தூண்டும் விதமாக எழுதவேண்டும் என்று திட்டமிட்டு, பல இளம் எழுத்தாளர்கள் தோற்றுப்போகும் அந்த இடத்தை, நகைச்சுவையுடனும், நாட்டுப்புறப் பாடலுடனும் லாவகமாகக் கூறியிருக்கும் விதம் சிறப்பு.
நாவல் முழுக்க வட்டாரச் சொற்கள் பல இடம் பெற்றுள்ளன. கதை போக்கு நாடகத்தனம் ஏதும் இல்லாமல், சரளமாக, அழகிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
-பா. சரவணன்.
நன்றி: தினமலர், 17/4/2016.