இலக்கியத்தில் மேலாண்மை
இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 574, விலை 1300ரூ.
தன்னம்பிக்கையும், நுண்ணறிவும் மிக்க ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில், இலக்கியப் பணியும் ஆற்றி வரும் இந்நூலாசிரியர், தமிழகம் அறிந்த சிறப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரி.
மனித வாழ்க்கைக்கு சீரிய ஒழுக்கமும், நெறிகளும் மட்டுமின்றி நிர்வாகமும், மேலாண்மையும் அவசியம். இவற்றை பண்டைய இலக்கியங்களும், இன்றைய இலக்கியங்களும் எப்படி எடுத்துரைக்கின்றன என்பதை இந்நூலாசிரியர் சிறப்பான ஆய்வுத் திறனோடு, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் விளக்கியுள்ளார்.
ராணி வார இதழில் தொடராக வெளியான இக்கட்டுரைகள், இந்நூலில் 550க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் 100க்கும் மேற்பட்ட உட்தலைப்புகளில் வெளியாகியுள்ளன. இந்நூல் தமிழ் இலக்கியங்கள் முதல் வட மாநில இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், அர்த்த சாஸ்திரம், விதுரநீதி, சுக்ரநீதி, பீஷ்மர் உபதேசம், கீதை – உட்பட அனைத்து நிர்வாகம் எவ்வாறு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார்.
அதேபோல் திருக்குர்ஆன், விவிலியம், சீனஞானம், யூத மற்றும் சீக்கியத் தத்துவங்கள், சமண மற்றும் பௌத்த சமயங்கள்… போன்றவற்றிலிருந்தும் மேலாண்மைக் குறித்த விஷயங்கள் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார். இவற்றை பழந்தமிழ்நாட்டுக் கதைகள், சீனக் கதைகள், புராணக் கதைகள், கிரேக்கக் கதைகள், சூஃபி மற்றும் முல்லா கதைகள், பைபிள் கதைகள், பீர்பால் கதைகள், ஜென் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்… என்று 300க்கும் மேற்பட்ட கதைகளோடும், ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் துணை கொண்டும் அறிவையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் படைத்துள்ளார்.
நூலின் எந்தப் பகுதியைப் புரட்டினாலும் கட்டுரைக்கு ஏற்ப வண்ண புகைப்படங்களுடனும், வரைபடங்களுடனும் அப்பகுதி கட்டுரையைப் படித்து, மனநிறைவு கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
உயரிய கருத்தை ஏற்படுத்தும் இந்நூல் அனைத்துத் தரப்பினரும் படித்துணர வேண்டிய நூல்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 31/8/2016.