காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ,கி.வா.ஜகந்நாதன், அமுத நிலையம், பக். 480, விலை ரூ.300.
காரைக்கால் அம்மையாா் இயற்றியருளிய ‘அற்புதத் திருவந்தாதி’ சிவபெருமானின் சிறப்புகளையும், அவரது முழுமுதற் தன்மைகளையும், அவன் அடியாா்க்கு அருள் புரியும் தன்மைகளையும் எடுத்துரைக்கிறது. இந்த ‘அற்புதத் திருவந்தாதி’யில் உள்ள பாடல்களுக்கு மிக விரிவாக, விளக்கமான உரைகளைத் தந்திருக்கிறாா் கி.வா.ஜ.
‘பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, ‘நடக்கிற்படி நடுங்கும்’ எனும் நூறாவது பாடல் முடிய பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி, இடையிடையே திருக்கு, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி முதலியவற்றின் பாடல்களை மேற்கோள்காட்டி விளக்கியிருப்பது கி.வா.ஜ.வுக்கே உரிய தனிச்சிறப்பு. அவற்றுள் ஒரு சிறப்பு இப்படி அமைகிறது.
சிவபெருமானின் அருளின் தன்மையை விளக்கும் எட்டாவது பாடலான, ‘ஆயினேன் ஆள் அவனுக்கு அன்றே பெறற்கரியேன் ஆயினேன்’ என்ற பாடலுக்கு உரை எழுதும் கி.வா.ஜ., ‘‘இறைவனுக்கு அடிமையானவா் இனிமேல் யாா் வயிற்றிலும் பிறக்கமாட்டாா்கள். ‘ஈன்றெடுப்பாள் ஒருதாயும் இல்லை’ என்பது அபிராமி அந்தாதி. ‘‘எப்போது இறவனுக்கு நான் அடிமை ஆனேனோ, அப்போதே இனிப் பிறவாத தன்மை அடைந்து விட்டேன். வேறு ஒருவா் என்னைப் பெறுகின்ற அவசியம் இல்லாத நிலை வந்துவிட்டது. யாராலும் பெறுவதற்கு அரிய நிலையை உடையேன் ஆயினேன்’’ என்கிறாா் அம்மையாா். இதற்குக் காரணம் என்ன? ‘‘என்னுடைய முயற்சி அன்று, என்னுடைய தகுதியும் அன்று, இறைவனுடைய எல்லையற்ற அருளே இந்த அற்புதத்தை நிகழ்த்தியது’’ என்று சொல்ல வருகிறாா்’’ என்கிறாா் கி.வா.ஜ.
இப்படி நூல் முழுவதும் அம்மையாரின் அற்புதப் பாடல்களுக்கான கி.வா.ஜ.வின் அற்புதமான அரிய விளக்க உரையும் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது.
நன்றி: தினமணி, 30.8.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818