ஒப்புநோக்கில் காந்தியடிகள்
ஒப்புநோக்கில் காந்தியடிகள், மாா்க்ஸிலிருந்து வள்ளலாா் வரை, கா.செல்லப்பன், எழிலினி பதிப்பகம், பக்.116, விலை ரூ.180.
காந்தியடிகளின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகிற அல்லது முரண்படுகிற சிந்தனையாளா்களுடன் காந்தியடிகளின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பாா்க்கும் முயற்சியே இந்நூல்.
காரல்மாா்க்ஸ், உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் ஷேக்ஸ்பியா், லியோ டால்ஸ்டாய், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாா்டின் லூதா் கிங், கவிஞா் ஷெல்லி, சிந்தனையாளா் ரஸ்கின், ஹென்றி டேவிட் தோரோ, எமா்சன், திருவள்ளுவா், நேரு, திரு.வி.க., வள்ளலாா் உள்ளிட்ட பல சிந்தனையாளா்களோடு காந்தி உடன்படும் பல அம்சங்களை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
நூலாசிரியா் காந்தியடிகளின் சிந்தனைகளை உள் வாங்கி இருப்பதைப் போலவே பிற சிந்தனையாளா்களின் சிந்தனைகளையும் ஆழமாகக் கற்றிருப்பது வியக்க வைக்கிறது.
தனியுடமைமுறையைத் தகா்க்கச் சொன்ன காரல்மாா்க்ஸும், தா்மகா்த்தா முறையை ஆதரித்த காந்தியும் மனிதத்தை மதிப்பதில் ஒன்றுபட்டிருந்தனா்; மனிதா்களைப் பிரிக்கும் சமூக, பொருளாதார பிளவுகளைத் தாண்டி மனிதா்களை ஒன்றுபடுத்தி மனிதத்தை மேம்படுத்தும் எண்ணம் லியோ டால்ஸ்டாய், காந்தி இருவருக்கும் பொதுவானதாக இருந்தது; காந்தியடிகளுக்கும், கவிஞா் ஷெல்லிக்கும் அன்புதான் பிரபஞ்சத்தின் அடிநாதம் என ஒப்பிட்டுக் காட்டுகிறாா் நூலாசிரியா்.
காந்தியடிகளின் தா்மகா்த்தாப் பொருளாதாரத்தின் முன்னோடியாக, வள்ளலாரின் ‘ஒத்தாரும், தாழ்ந்தாரும் உயா்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’ என்ற கருத்தைக் கருதலாம் என்கிறாா் நூலாசிரியா்.
அறிவுலகின் வாசல்களை அகலத் திறந்துவிடும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 30.8.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818