மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள்,

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், பக். 200+192, விலை 80+75ரூ.

தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை ஒவ்வொரு கட்டுரையும் இயம்புகின்றன.

இரு நூல்களிலும் முறையே, 25 + 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் நூலில், ‘பெண் தன் உணர்வை ஆணைப் போல் வெளிப்படுத்தாமையே அதன் சுவையைக் கூட்டும்போலும்’ என்றும் (பக்.21), ‘உண்மையறிவே மிகும்’ என்ற கட்டுரையில், வள்ளுவரின், ‘தொட்டனைத் துாறும் மணற்கேணி’ (குறள் 396) என்ற குறளுக்கு, ‘தோண்டப்பட்ட கிணற்றில் மண்ணடியில் உள்ள நீரேயன்றி, மழை நீர், அண்டையிலுள்ள நீர் நிலை முதலியவற்றில் உள்ள நீரெல்லாம் வந்து சுரத்தல் போல், கல்வியால் ஒருவனது உள்ளத்தில் மறைந்து கிடந்த இயற்கை அறிவாகிய பரம்பரை அறிவே அன்றி, எங்கெங்கோ கண்டும் கேட்டும், அனுபவித்தும் அறிந்த சூழ்நிலை அறிவும் பெருகும் என்றும் (பக்.85), வள்ளுவரின் ‘இடுக்கண் வருங்கால்’ குறளுக்கு அருமையான ஆய்வுரை தருவதும் (பக்.41), ‘கட்டுச்சோறு’ என்ற கட்டுரையில், ‘வழிப் பயணத்திற்கு கட்டுச் சோறு கட்டிச் செல்வது போல, முற்கால வாழ்க்கையில் (இளமையில்) குறைவற்ற அறத்தோடு கூடிய பிறர் நலம் நாடும் நல்வாழ்வு வாழ வேண்டும்’ என்ற அறவுரை நல்குவதும் (பக்.61), படிப்போரில் மனதில் பல நல்லுணர்வுகளை ஏற்படுத்தும்.

அனைவரும் சிறப்பாக வாழ வழிகாட்டும் தகவல்கள் இதில் உள்ளன.

டாக்டர் கலியன் சம்பத்து

ன்றி: தினமலர், 8/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *