நினைவுச் சின்னம்
நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ.
சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி மரண ரயில் பாதைத் திட்டத்திற்கு அழைத்துச் சென்று அடிமைகளாய்ச் சித்ரவதை செய்யப்பட்டு உழைப்பைச் சுரண்டி அவலப்பட்ட, தமிழர் குடும்பம் ஒன்றை மையமாக வைத்து, அவர்கள் படும் இன்னல்களை மிகவும் வேதனையோடு நவீனமாக்கியுள்ள நூலாசிரியர், 1934 – 44 ஆண்டுகளின் நிலைமையை இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளோட நயம்பட எழுதியுள்ளார்.
‘கடல் மாதிரி ஆளுங்க நடந்தாங்க. இன்றைக்குக் கால்வாய் மாதிரி’ (பக். 277) ஆகியதும், ‘காந்தி என்ற பெயரைக் கேட்டதும் வியப்போடு நிமிர்ந்து பார்த்த அந்த ஜப்பானியன்’ (பக். 280) என்று, காந்தி மீது கொண்ட மதிப்பையும், ‘நேதாஜியைப் போல ஒருவரைக் காட்டி, ஏமாற்றி (பக். 401) வேலை வாங்கிய ஜப்பானியர் சூழ்ச்சியையும், வெள்ளைக்காரன் ஒரு பங்கு கொடுமைன்னா, ஜப்பான்காரன் ஆயிரம் பங்கு செஞ்சு இருக்கிறான்’ (பக். 384) என்று ஆங்காங்கே வரலாற்றையும் சுடும் யதார்த்தமான வரலாற்று நாவல். தமிழினத்தின் புதையுண்ட வரலாற்றைப் புதுபிக்கும் அருமையான புதினம்.
-பின்னலூரன்.
நன்றி: தினமலர், 19/2/2017.