பஞ்ச தந்திரக் கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகள், தொகுப்பாசிரியர் முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 520, விலை 380ரூ.
பஞ்ச தந்திரக் கதைகள் கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் தெற்குப் பகுதியை அமரசக்தி என்ற அரசன் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தும், அவர்கள் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருந்தது அரசனுக்கு கவலையாக இருந்தது. அவர்களை 6-மாதத்தில் எல்லாத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்குவதாக, விஷ்ணுசர்மா என்ற அந்தண ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அதன்படி கல்வியறிவு அற்ற அவர்களை, எப்படி மிகச் சிறந்த முறையில் தயார் செய்கிறார் என்பதை விளக்கும் கதைகள்தான் இது.
‘பஞ்ச தந்திரம்’ என்றால் ஐந்து தந்திரங்களைக் கொண்ட கதைகளாகும். அதாவது ஒரு நாட்டை ஆளும் நிர்வாகிக்கு, எதிரிகளை வெல்லக்கூடிய ஐந்து வகையான தந்திரங்களும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக நட்பைக் கெடுப்பது, நட்பைப் பெறுவது, அடுத்துக் கெடுப்பது, அடைந்ததை அழிப்பது, ஆயாமல் செய்வது ஆகிய ஐந்து தந்திரங்களை பெற்றிருக்க வேண்டும். இந்த ஐந்து தந்திரங்களையும் விளக்கும் கதைகளே, அதன் தொடராக கதைக்குள் கதையாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு கதையும் படிப்பவர்கள் மனதில் பல யுக்திகளை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி முதல் தந்திரமான ‘நட்பைக் கெடுப்பது’ என்ற தலைப்பில் 10 கதைகளும்.. இப்படி ஐந்து தலைப்பிலும் சேர்த்து மொத்தம் 86 கதைகள் இந்நூலில் உள்ளன. இக்கதைகளில் உலக வாழ்க்கை, மனித இயல்பு, பகுத்தறிவு கூறும் புத்திமதிகள், வீரம், சோகம், சூழ்ச்சி, அன்பு, கோரம், ஈகை, ஏமாற்றம், நட்பு, தியாகம், நயவஞ்சகம். என்று எண்ணற்ற கருத்துக்கள் சுவையான கற்பனையோடு பின்னப்பட்டு அமைந்துள்ளன.
‘இக்கதைகளை மனதில் நிலை நிறுத்தி யார் செயலாற்றுகிறார்களோ, அவர்களை இந்திரனாலும் கூட வெல்வது கடினம்‘ என்று இக்கதையாசிரியர் விஷ்ணுசர்மா கூறியுள்ளார். அத்தனை சிறப்புமிக்கவை இக்கதைகள்.
நன்றி: துக்ளக், 17/3/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031302_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818