பெண்ணியம்

பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, பாரி புத்தக நிலையம், பக். 216, விலை 90ரூ.

பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.

இந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர்.

இன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக அறிய துணை நிற்பன ஆங்கில நுால்களே. ஆனால், சில கட்டுரைகள் பெண்ணியம் பற்றிய ஆங்கில நுால்களின் ஒரு சில பகுதிகளை அப்படியே மொழிபெயர்த்து தருகின்றன. மேலும் சில கட்டுரைகள் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரிவர புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டு உள்ளன.
இவ்வாறான கட்டுரைகள் தவறான கருத்துக்களை விதைத்து விடக் கூடாது என்னும் நோக்கில், ‘பெண்ணியம்’ பற்றிய முழுப் பார்வையைத் தரும் அறிமுக விளக்கக் கையேடாக இந்நுால் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எது பெண்ணியம் என்னும் வினாவுக்கு விரிவான விளக்கமாக அமைந்த இந்நுால், வரலாறு, தத்துவம், கோட்பாடு, இயக்கம், செயல்பாடு என பல கோணங்களில் பெண்ணியத்தை விளக்கி உள்ளது.

இந்தியாவில், 18ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த, ‘மேலாடைக் கலகம்’ அல்லது ‘தோள் சீலை’க் கலகம் என்று சுட்டப்படும் இக்கலகம், இந்திய மண்ணில் பெண் விடுதலைக்கான முதல் போராட்டமாக அமைந்தது எனலாம்.
அதைத் தொடர்ந்து குழந்தை மணம், சதி, பர்தா முறை, தேவதாசி முறை போன்றவற்றை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, சுவர்ண குமாரிதேவி, ருக்மாதேவி, சரோஜினி நாயுடு, வை.மு.கோதை நாயகி, அம்புஜம்மாள், ஈ.வெ.ரா., நாகம்மை, கண்ணம்மாள், டாக்டர் முத்துலட்சுமி போன்றோர் நடத்திய போராட்டங்கள் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் படிப்பவரிடையே பெண்ணியச் சிந்தனையைத் துாண்டி, விழிப்புணர்வை ஊட்டும் முயற்சியே இந்நுாலாகும்.

– புலவர் சு.மதியழகன்

நன்றி: தினமலர், 13/10/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.