சாயத்திரை
சாயத்திரை, சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.218, விலை ரூ.200.
திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கிவரும் சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கருப்பொருளாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் “சாயத்திரை’.
ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி நஷ்டப்பட்ட சாமியப்பன், அவருடைய உதவியாளர் பக்தவச்சலம் – ஜோதிமணி, அந்நிறுவனத்தின் காவலாளி நாகன் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு முதியவர் (செட்டியார்) ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு வட்டார வழக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை ஆகியவை தனித்தனியே விவரிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் சாயப்பட்டறை – ஆயத்த ஆடை தொழில்களை மையப்படுத்தியே உள்ளது.
சாயப்பட்டறையில் பணிபுரிந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். சாயக்கழிவுகளால் உடலின் மேற்புறம் முழுவதும் புண்கள் ஏற்பட்டு சீழ்பிடித்துள்ள நிலையிலுள்ள தன் காதல் மனைவியைக் கணவன் நொந்துகொள்வது, கணவன் படும் வேதனை தாளாமல் மனைவி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வது மனதை உலுக்குகிறது.
முதுமைக்கே உரித்தான வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் செட்டியார் தற்கொலை செய்துகொள்வது; சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரில் சிறுவர்கள் கால்களை நனைத்து விளையாடுவது; திருப்பூர் போன்ற தொழில்மயமாக்கப்பட்ட நகரங்களில் வாழ்வோர் மாசுபாடற்ற நீர்நிலைகள், பச்சைப் பசேலென இருக்கும் மரம், செடி கொடிகளை இனிவரும் காலங்களில் ஓவியங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என சாமியப்பனின் மனைவி நாவலின் இறுதியில் புலம்பியிருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
நன்றி: தினமணி, 27/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000013335_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818