சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம், பேராசிரியர் நன்னன், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ.
94 வயதான பேராசிரியர் நன்னன் 724 பக்கங்களில் இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் நூலை தமிழ் கூறும் நல் உலகுக்கு விளக்கவுரையுடன் வடித்து தந்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், முழுப்பாட்டு, அந்த பாட்டின் உரைப்பாட்டு, அதன் பொழிப்பு, அதில் உள்ள அருஞ்சொற்களின் பொருட்கள், அந்த பகுதியின் விளக்கம் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதி இருக்கிறார்.
சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்து இயங்கும் காப்பியம் என்று கூறியுள்ள பேராசிரியர் நன்னன், கண்ணகி தன் வாழ்வை இழந்து தவித்தாள், மாதவி தனக்குரியதை அடையப்போராடினாள் என்று மாதவி பற்றிய சிறப்பையும் கூறி, “மாதவி பற்றிய எனது கருத்து பற்றி தமிழுலகு முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்து, மாதவி பற்றி ஒரு புதிய பரிமாணத்தை இந்த நூலில் பதிவிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவரவர் வாரிசுகளுக்கும் விட்டுச் செல்லக்கூடிய நல்ல காப்பிய செல்வமாகும் இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.