தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்
தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம், க. பூரணச்சந்திரன், காவ்யா,பக்.214,விலை ரூ.210
தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் தொடங்கி, தமிழ் இலக்கியத்தில் மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித் இலக்கியம் போன்ற பதின்மூன்று தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும், கவலை கொள்வதாகவும், மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம் என்கிற கட்டுரையாளரின் கருத்து முக்கியமானது. மேலும், புத்திலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்கான சூழல் 19-ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று என்றும் குறிப்பிடுகிறார்.
தமிழ்க் கவிதையை நவீனப்படுத்தியவர்கள் என்று வள்ளலார், சுந்தரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரையும், தமிழ்ப் புதுக்கவிதையில் அந்நியமாதலைச் சித்திரித்தவர்களாக சி.மணி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆத்மாநாம், சுகுமாரன், ஆனந்த், நாரணோ ஜெயராமன் ஆகியோரையும் குறிப்பிடுவதன் மூலம் கட்டுரையாளர் தமிழிலக்கியத்தில் ஆழங்காற்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“தமிழ் இலக்கியத்தில் பெண்கள்’’ என்கிற கட்டுரையில் சங்க இலக்கியங்களிலும், திருக்குறளிலும் பெண்ணடிமைத்தனம் மிகுந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் பற்றிய கட்டுரைகளாக இருப்பினும், தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவுக்கு வந்த காலகட்டம் (கி.பி. 1557), தமிழ்நாட்டில் முதன்முதலில் அச்சுக்கூடம் அமைக்கப்பட்ட இடம் (தரங்கம்பாடி 1712), திருக்குறளும், நாலடியாரும் அச்சு வடிவில் வந்தது (கி.பி.1812), தொல்காப்பியமும் நச்சினார்க்கினியமும் அச்சேறியது (கி.பி. 1847) போன்ற பல அரிய தகவல்கள் இத்தொகுப்பில் உள்ளன.
பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள லீனியர், நான் லீனியர் பாணி குறித்த கட்டுரையும், மாந்திரீக யதார்த்தம் குறித்த கட்டுரையும் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் சரியாகப் புரிந்து கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும்.
நன்றி: தினமணி, 8/8/2016.