உணவே அமிர்தம் உணவே மருந்து
உணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ.
40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு நாம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம்.
நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை உட்கொள்வது, அந்த உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள் எந்த அளவில் இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களை இந்நூலாசிரியர் எளிய முறையில் சுமார் 24 கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.
‘அறநூல்கள் கூறும் உணவு நெறி’ என்ற ஆரம்பக் கட்டுரையிலேயே திருக்குறள், ஆத்திசூடி, விதுரநீதி, ஆசாரக்கோவை போன்ற நூல்கள் உணவு உண்ணும் முறைகளையும் உண்ணக்கூடாத முறைகளையும் பற்றி கூறுவதை ஆசிரியர் விளக்கியுள்ளார். அதேபோல் நீர், பால், தேன், பழங்கள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள்…. போன்ற உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்களையும், அவை தரும் ஆற்றல்களையும், இவற்றை சாப்பிடும் முறைகளையும் இவை குறித்த கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.
தவிர, பருமன் ஆபத்தானதா, எடைக் குறைப்பதற்கு என்ன வழி, உண்மையில் நன்மை உண்டா, கேடு செய்யும் உணவுப் பொருட்கள் எவை, குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கான உணவுகள்… என்று பல கட்டுரைகளும் ஆராக்கியத்திற்கு பயனுள்ள பல விஷயங்களைக் கூறியுள்ளது சிறப்பானது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 29/6/2016.