காலச்சுவடுகள்
காலச்சுவடுகள் – தெலுங்கு மூலம், நவீன், தமிழில் – இளம்பாரதி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. பக். 1045, விலை 545ரூ.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ரீஸ்ரீ த.நா.குமாரசாமி, சுந்தர ராமசாமி ஆகியோர் மொழிபெயர்த்த நாவல்களைப் போன்ற அதே மொழிபெயர்ப்பை இந்த தெலுங்கு நாவலில் காண முடிகிறது. கதை மாந்தர்களின் உரையாடல் அனைத்தும் பேச்சு வழக்கில் மிக எளிமையாக நம் கிராமத்துக் கதை போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே தோன்றுவதில்லை. வாரங்கல் அடுத்த ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்ற சிறுவன் இந்திய விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில், குறிப்பாக வாரங்கல் நகரில் நடைபெற்ற ஆந்திர மகாசபையின் 11ஆவது ஆண்டு மாநாட்டை ஊர்வலத்தைப் பார்ப்பதில் தொடங்கி, ஆந்திர மாநிலம் உருவானது வரையிலான காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியில் நடந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை, மிக எளிமையாக ஒரு குடும்பம் அதன் உறவுகளைக் கொண்டு காட்சிப்படுத்துகிறது இந்த நாவல். அந்த நாளில் சிறுவர்கள் பள்ளி செல்ல இயலாத நிலை, வீட்டுப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லி மாளாத கொடுமைகள், துரை என்கிற ஜமீன்வீடுகளின் அட்டூழியங்கள், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினரின் நடவடிக்கைகள், அன்றைய நாளில் புதிதாக வந்த சினிமா, கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாமல் குடும்பங்களில் பலரும் மர்மநோய்களுக்குப் பலியாதல், கிராமங்களைத் தாக்கும் வன்முறைக் கும்பல்கள் என அந்நாளின் வாழ்க்கை முழுவதும் நாவலுக்குள் வந்துவிடுகிறது. இத்தனை கொடுமைகளிலும் இந்த நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் பலவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்வின் உண்மையும்கூட. 2004இல் இந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது. விருதுக்குத் தகுதியுடைய நாவல்தான். நன்றி: தினமணி