சீர்காழி மூவர்
சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக்கம் 264, விலை 120 ரூ.
ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்த கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ் பக்தி, கலாசாரம் என்பதை இணைத்து, இந்த நூலில் புகழ்பெற்ற மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால் ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த இந்த மகான்கள் பெருமையும் பேசப்படும். ஆனால் தெய்வ இசையை வளர்த்த இவர்களைப் பற்றி தகவல்கள் திரட்டி, சிறந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். பரிகாச மொழி கூறி, கிண்டல் பேசி புகழ்தல் பாடல்களுக்கு கூடுதல் சுவாரசியம் தருபவை. இதைத் துவங்கியவர் மாரி முத்தா பிள்ளை. இம்முறையை, பின்னாளில் கோபால கிருஷ்ண பாரதி, அருணாச்சலக் கவிராயர் ஆகியோர் பின்பற்றினர் (பக்கம் 90). கம்பரின் இராமாவதாரம் நிறைவேறிய அதே பங்குனி ஹஸ்த திருநாளில் கவிராயரின் ‘இராமநாடக கீர்த்தனை’ பாடல்களும் அரங்கேறிய தகவலைக் கூறும் ஆசிரியர், எந்த அளவு இசையும், தமிழும், அதன் பொருளும் மக்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன என்று சுவைபட நூல் முழுவதும் சொல்கிறார். இசை ஆர்வலர்களும், பக்தி நெறி விரும்புவோரும் படிக்கவேண்டிய நல்ல நூல். – பாண்டியன்
—
தெய்வத் திருமணங்கள், திருமுருக கிருபானந்தவாரியார், குக ஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, பக்கம் 152, விலை 36 ரூ.
முருகன் புகழ்பாடும் திருப்புகழை எங்கும் பரப்பி, ஆலயங்களில் திருப்பணி நடத்தி, பாமரர் மனதிலும் பக்தியோடு கலந்த தமிழை விதைத்தவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இவர் பாட்டாளிக்கும் பக்தியைக் கூட்டாளி ஆக்கியவர். தாட்சாயணி திருமணம், பார்வதி திருமணம், மீனாட்சி திருமணம், வள்ளி, தெய்வானை திருமணங்கள், சீதா திருமணம் போன்ற ஆறு தெய்வத் திருமணங்களை மேடையில் வாரியார் பேசியதை, அப்படியே வரிகளில் பதித்து, நூலாக வெளியிட்டுள்ளனர். குறுந்தகட்டில் வாரியார் பேசுவதுபோல், இந்த நூலைப் படித்தவர் செவிகளில், அவரது கணீர் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம். படிப்பவர்கள் பேச்சு நடையில் நூல் நடந்து வருவதால், படிக்கும்போதே கேட்கவும் முடிகிறது. கேட்பதை மனக்கண்ணால் காணவும் முடிகிறது. – முனைவர் மா.கி. ரமணன்.
—
ஆணவம் கன்மம் மாயை பற்றிய விளக்க உரைகள், முனைவர் அ. நாகலிங்கம், மயிலை சின்னண்ணன் பதிப்பகம், சென்னை, பக்கம் 368, விலை 180 ரூ.
மயிலை சின்னண்ணனின் சைவ சித்தாந்தக் கருத்தரங்க அமர்வுகளில் 22 சைவ சமய பேரறிஞர்களால், வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். சைவ சமயத்தின் பேருண்மைகளாக விளங்குவது ஆணவம் – கன்மம் – மாயை. இவைகளைப் பற்றிய செய்யுள் நூலினைப் படிக்க நீண்ட காலம் தேவைப்படும். அத்தோடு பாடல்களைப் படித்து, உடன் பொருள் விளங்கிக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. மூன்றாண்டுகள் நடந்த கருத்தரங்குகளில், பேரறிஞர்களால் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகள், மிக எளிமையாய் உள்ளன. அனைத்து சைவ பெருமக்களும் வாசித்து பயன்பெறத் தக்க சைவ கருவூலம். – குமரய்யா நன்றி: தினமலர் 07-10-12