தமிழ் மொழி வரலாறு
தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ.
பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் புறவரலாறு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் ஆகிய தலைப்புகளில், மொழி ஆய்வை விரிவாக இந்த நூல் காட்டுகிறது. எழுத்து இலக்கிய மொழி நடையுடன், பேச்சுமொழியில் எழுந்த கும்மி, பள்ளு, அம்மானை போன்ற வட்டார மொழி இலக்கியங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 18ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி சமய போதகர் குழுவைச் சேர்ந்த சீகன் பால்கு எழுதிய தமிழ் இலக்கணநூல், பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் எழுதிய பேச்சுத் தமிழின் இலக்கணம், எல்லீஸ், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களும் ஆய்வுக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. தமிழ்மொழியிலிருந்து பிற மொழிகளுக்குப் பலசொற்கள் சென்றுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்கள், திராவிட மொழிக் குடும்பத்தின், பழைய கிளைமொழி ஒன்றினைக் குறிக்கின்றன என, ‘ஹிராஸ் பாரதியார்’ போன்றோர் கருதுகின்றனர். தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொற்களாவன, கைதை, கைதகா, ஏலம், ஏலா, பல்லி, பல்லீ, மயில் மயூர புற்று, புத்திக, மீன் போன்றவை. 300 ஆண்டுகளுக்கு முன், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குப் போன சொற்களாவன, காசு, கட்டுமரம், கயிறு, மாங்காய், தேக்கு, அப்பளம். ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழர்கள் இலங்கையோடு தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கையை ஆண்ட அரசர்களில் ‘எலாரா தமிழர். சீன யுவான்சுவாங் தென்னகத்திற்கு வருகை புரிந்தார்’ (பக்கம் – 247). தமிழில் கலந்த அரபுச் சொற்கள் – இலாக்கா, கொசுறு, சைத்தான், சுல்தான், காப்பி. தமிழில் வந்துள்ள மராத்தி சொற்கள் 53, இவற்றில் 23 சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளன. அவற்றுள் சில – கிச்சடி, கேசரி, சேமியா, சொஜ்ஜி, ஜாடி, கங்காளம். தமிழறிஞர் தெ.பொ. மீ. இந்நூலின் வழி 3000 ஆண்டுப் பழமையான தமிழ்மொழி, வடமொழியில் கலந்ததையும், 300 ஆண்டுகளுக்கு முன் பிறமொழிகள் தமிழில் கலந்துள்ளதையும், தமிழ்மொழி வரலாறாகத் தந்துள்ளார். தமிழுக்குத் தனி மகுடம் சூட்டும் ஆய்வு நூல் இது. – முனைவர் மா.கி. ரமணன்.
—
தமிழும் கம்பனும், கவிமாமணி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்கம் 140, விலை 70 ரூ.
அமரர் ஏ.வி.எம். நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக நடந்த கம்பர் விழாவில், பேராசிரியர் தி.மு. அப்துல்காதர் ஆற்றிய உரையே நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழ் மொழியின் அ, ஆ, எழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள் என்று பெயர் தீட்டக் காரணம் என்ன என்பதை விளக்கும் ஆரம்ப உரையே அற்புதம். கம்பன் காதலர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் ஒரு பெரும் விருந்து. – சிவா.
—
திருக்குறள், பரிமேலழகர் உரை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 210 ரூ.
திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை மிகுந்த சிறப்பானது. ஆனால், இன்றைய தமிழ் மாணவர்கள் அவரது செம்மார்ந்த உரையை எளிதாக உணரக்கூடியதா என்பது தெரியவில்லை. இருந்தபோதும் இந்த நூலை வெளியிட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
—
குருவிக் கோட்டம், சிங்கை மா. இளங்கண்ணன், மணிவாசகர் பதிப்பகம், பக்கம் 144, விலை 75 ரூ.
‘மனிதர்கள் பேசுவதால் (செல்போன்), குருவிகள் இல்லை’ என்று சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் பேச வேண்டியதை, அவர்களுக்காக, குருவிகள் பேசுவதாய் ‘குருவிக் கோட்டம்’ என்று குறுநாவலாக்கி இருக்கிறார் ஆசிரியர். நாவல் முழுக்க விதவிதமாய் பறவைகள் உலா வருகின்றன. சிறகடித்துப் பறக்கின்றன. படிக்கும் அனைவரின் மனதும் நிச்சயம் சிறகடித்துப் பறக்கும். – ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர் 07-10-12