திரவ்பதி
திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, சென்னை, விலை 200ரூ.
இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் முனைப்புடன் படிக்கச் செய்வதாக உள்ளன. அங்கங்கே ஒரு குலுக்கு குலுக்கிச் சிந்திக்கச் செய்வதாகவும் உள்ளன. புராணம் சார்ந்த நாவல்களில் தனித்த இடம் பெறத்தக்க இந்த சுவையான நாவலை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இளம்பாரதி. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.
—-
இயக்குநர் பாண்டிராஜ் ப்ளாஷ்பேக், விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.
சிறுவயதில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது அனைவருக்கும் பிடித்தமானது. அந்த வகையில் சினிமா இயக்குநர் பாண்டியராஜ், தான் படித்த பள்ளிக்கூடம், சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், சொந்த ஊரான விராச்சிலையின் திருக்குளம், அங்குள்ள அஞ்சலகம் என்று இளமையில் சந்தித்த மனிதர்களையும், இடங்களையும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ரசனையோடு அசை போடுகிறார். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, குரங்கு பெடல், பம்பரம் விளையாட்டு போன்றவைகளை ஞாபகம் வருதே… ஞாபகம் வருவதே…. பாணியில் நினைவுகளில் நிலைக்கச் செய்கிறார். உதவி இயக்குநர் ஆன மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் முன்பே அம்மாவின் மறைவு. இயக்குநர் ஆனது தெரியாமலேயே அப்பா மரணம், என்னால் என் தந்தைக்கு செய்ய முடிந்த ஒரே ஒரு விஷயம், ஊரே மெச்சும்படி அவரின் இறுதி ஊர்வலத்தை நடத்தியதுதான் என்ற வரிகள் நெஞ்சைப் பிழிகிறது. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.