தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ 175. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html

தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் முன் பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரு நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை ‘தேவதாசியும் மகானும்’ என்ற தலைப்பில் வி. ஸ்ரீராம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா நாராயணன். விறுவிறுப்பான அதிர்ச்சி தரும் பல செய்திகளை உள்ளடக்கிய இந்த நூலின் கடைசி வரிகளை ‘மாலன்’ எழுதிய கவிதை வரிகளோடு நிறைவு செய்திருப்பது ஒரு முழுமையைப் புலப்படுத்துகிறது. ‘அரசர்கள் இவனைப் போற்றினார்கள். வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள். ஆனால் ஒரு தாசியல்லவோ இவனுக்குக் கோயில் கட்டினாள்?’ சங்கீத ஜாம்பவான்கள் ஆண்டுக்கு ஒருமுறைகூடித் குதூகலிக்கும் திருவையாறில், தியாகராஜ சுவாமிகளுக்கு சமாதிக்கு எதிரிலேயே இவருடைய சமாதியும் இருக்கிறது. 1927 ஆம் ஆண்டில் மதராஸில் நடக்க இருந்த காங்கிரஸ் கூட்டத்தோடு அகில இந்திய சங்கீத சம்மேளனமும் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்திலிருந்து பங்கேற்றவர், தேவதாசி மரபில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாவும் ஒருவர். பண்டிட் விஷ்ணு திகம்பர் என்னும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் அம்மையாருக்குத் தங்கப் பதக்கம் பரிசாக வழங்கிப் பாராட்டினார். சம்மேளனம் வெற்றிகரமாக நடந்து அதன்மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டுதான் மியூஸிக் அகாதமி நிறுவப்பட்டது. ஆனால், ஒருமுறைகூட நாகரத்தினம்மாவை இந்த மதிப்பு வாய்ந்த நிறுவனம் பாட அழைத்ததில்லை போன்ற சங்கீத உலகைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும் உடைய, ஒரு பக்கம் விடாமல் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல்!.  

 

சிபி, ஏ. ஏ. ஹெச். கே. கோரி, இருவாட்சி, ரூ. 170.

தமிழ்நாட்டு அரசியல், அதுவும் சுதந்திரம் பெற்ற பிறகு பட்ட, பட்டு வருகிற, இனியும் படப்போகிற அவலத்தை அப்படியே, பெயர் சொல்லியே கிழித்துக் கூறு போடுகிறார் ‘அரசியல்’ நாவலில்! ஏ. ஏ. ஹெச். கெ. கோரி, இந்த நாவலில்… ஒரு காட்சியில்… ஹோட்டலைத் தேடிச் செல்கிறபோது தலைவர் கேட்கிறார். “இங்கே ஒரு ஹோட்டல் இருக்கிற மாதிரி இருக்கே. ரொம்பக் கூட்டமா இருக்குமோ, ரோட்லே ஒரே பைக்கா இருக்கே?”. “ரோட்ல ஒரே பைக்கா நின்னா அது ஹோட்டல் இல்லே தலைவா: அதுக்குப் பேரு டாஸ்மாக்” என்று பதில் வருகிறது. ‘அளவோடு ஆசைப்பட்டால் ஆனந்தமாய் வாழலாம். அத்தனைக்கு ஆசைப்பட்டால் மதுரை ஆதினமாகலாம்’ என்று ஒரு கிண்டல்!. ‘ஹிந்தி எதிர்ப்புக் கலவரத்தை அன்றைக்குத் தூண்டிவிட்டவர்கள், அவர்களின் வாரிசுகள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியோடும், ஹிந்தியர்களோடும் சமரசம் செய்துகொண்டு… விமானத்தில் ஜீவிக்கிறார்கள். சி. பி. என்பது சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் என்பதின் சுருக்கம்தான். படிப்பதற்குச் சுவையாக இருந்தாலும் பிற்பகுதியில் நாவலின் தன்மை தொய்வடைகிறது. இந்த நாவல், ஆசிரியர் பல விஷயங்களைக் குமுறிக் கொட்ட ஒரு களமாக அமைந்தது என்பதைத் தவிர என்ன பயன்? பின் அடையில் பிரகடனம் செய்திருக்கிற மாதிரி ‘மிச்சமெல்லாம் கனவுகள்’ என்றான பிறகு வேறென்ன சொல்ல? அவசியம் படித்து ஆன்ம சுத்தி பெறலாம், அப்படி ஒன்று இருப்பவர்கள் மட்டும்!   நன்றி: கல்கி (14.03.2013).  

Leave a Reply

Your email address will not be published.