நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85

தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை பிரபலம் அடைந்தன. பிரிட்டிஷார் எழுதிய, கெஜட் பாணியில் அமைந்தவை என்றாலும், ஊர்ப் பெயர்களுக்கான காரணங்கள், உள்ளூரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவற்றையும் தொகுத்து அளித்துள்ளார். மாவட்டங்களின் சமகால பொருளாதார வளர்ச்சி பற்றியும் விவரித்துள்ளதால், இந்த நூல்கள் குறிப்பிடத்தக்க இடம் பெறுகின்றன. நன்றி: தினமலர், 15/6/2014.  

—-

கால்நடை பூச்சியியல் மற்றும் மென்னுண்ணியியல், சி.சௌந்தரராஜன், சங்கம் பதிப்பகம், பக். 291, விலை 300ரூ.

கால்நடை மருத்துவத்தில் ஒரு பகுதியாக விளங்கும் பூச்சிகள் பற்றியது இந்த நூல். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலவிதமான நோய்களை உருவாக்கும் புற ஒட்டுண்ணிகளைப் பற்றிய தகவல்கள், படங்களோடு இந்த நூலில் தரப்பட்டுள்ளன. புற ஒட்டுண்ணிகளின் புறத்தோற்றம், வாழ்க்கை சுழற்சி, நோய் பரப்புதல், நோய் அறியும் முறை, நோய் தடுப்பு முறை முதலியவை நுண்ணிய பார்வையில் விளக்கம் பெற்றுள்ளன. நூலினை பகுத்துள்ள முறை பாராட்டுக்குரியது. மாணவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் அறிந்துகொள்ளும்படியாக, எளிமையாக எழுதப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் அமைந்துள்ள அருஞ்சொல் அகராதி மிக்க பயனுள்ளது. தாய் மொழியில் அறிவியல் கல்வி பெறுவோருக்கு எளிமையாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 15/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *